புதுப்பேட்டையில் உறவினர்களிடம் கேரளா போலீசார் விசாரணை
கேரளாவில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக புதுப்பேட்டையில் உள்ள அவரது உறவினர்களிடம் கேரளா போலீசார் விசாரணை நடத்தினர்.
புதுப்பேட்டை:
பண்ருட்டி அருகே பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அமலநாதன் மகன் அழகுவேல் (வயது 31). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம், கெடிலம் செஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மகள் தமிழ்ச்செல்வி (28) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து அழகுவேல் குடும்பத்துடன் கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் தங்கி இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கேரளாவில் தமிழ்ச்செல்வி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே தமிழ்செல்வி சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி அவரது உறவினர்கள் புதுப்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், தமிழ்ச்செல்வி சாவு குறித்து உரிய விசாரணை நடத்த கேரளா போலீசாரிடம் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கேரளா போலீசார் வந்தனர். பின்னர் அவர்கள் தமிழ்ச்செல்வி தற்கொலை தொடர்பாக அவரது உறவினர் மற்றும் அழகுவேல் உறவினர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது வரதட்சணை காரணமாக தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தினர். பின்னர் கேரளா போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.