சிறுவாணி அணையை சீரமைக்க ரூ.47 கோடி கேட்கும் கேரளா


சிறுவாணி அணையை சீரமைக்க ரூ.47 கோடி கேட்கும் கேரளா
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுவாணி அணை தொடர்பாக கோவையில் இருமாநில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் அணையை சீரமைக்க ரூ.47 கோடியை கேரள அதிகாரிகள் கேட்டு உள்ளனர். முதற்கட்டமாக ரூ.12 கோடி வழங்க தமிழக அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

கோயம்புத்தூர்

சிறுவாணி அணை தொடர்பாக கோவையில் இருமாநில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் அணையை சீரமைக்க ரூ.47 கோடியை கேரள அதிகாரிகள் கேட்டு உள்ளனர். முதற்கட்டமாக ரூ.12 கோடி வழங்க தமிழக அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

சிறுவாணி அணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் கோவை மாநகர் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த அணையின் பராமரிப்பை கேரள அரசு செய்து வருகிறது. அதற்கான செலவு தொகையை தமிழக குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது.

இதற்கான தமிழக- கேரள அரசு அதிகாரிகள் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்த நிலையில் கோவை அவினாசி ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழகம் மற்றும் கேரள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் கூட்டுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் சிறுவாணி அணையின் பாதுகாப்பு செயல்பாடு குறித்து இருமாநில அதிகாரிகளும் ஆலோசனை செய்தனர்.

அப்போது அணையின் பக்கவாட்டில் உள்ள கல்சுவர் பலம் இழந்து உள்ளதாகவும், நீர் கசிவு இருப்பதால் அணை ஆபத்தான சூழலில் இருப்பதால் உடனடியாக அணையை பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டும் என்று கேரள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சீரமைக்க ரூ.12 கோடி

சிறுவாணி அணையின் பக்கவாட்டு கல்சுவர் பலம் இழந்து உள்ளதால் அதை முதலில் சீரமைக்க முடிவு செய்து உள்ளது. அதற்கு மட்டும் ரூ.12 கோடி செலவாகும் என்று கேரள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதவிர அணைக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால் அதை சரிசெய்து ரோடு போடவும், அணையின் நீரேற்றும் பகுதியில் பழுதடைந்த வால்வுகளை சரிசெய்வது, தண்ணீர் செல்லும் குகைப்பாதையில் (டனல்) தண்ணீரை அளவிடும் கருவியை புதிதாக அமைப்பது என அணையை முழுவதும் சீரமைக்க மொத்தம் ரூ.47 கோடி செலவாகும் என்பதால் அதை வழங்க வேண்டும் என்று கேரள அதிகாரிகள் கேட்டனர்.

இதில் அணையின் பக்கவாட்டு கல்சுவரை சீரமைக்க ரூ.12 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதில் முதற் கட்டமாக ரூ.5 கோடி வழங்கப்படும்.

பின்னர் பணிகள் தொடங்கி யதும் மீதமுள்ள ரூ.7 கோடி கொடுக்கப்படும். இந்த பணிகள் முடிந்த பின்னர் படிப்படியாக ஒவ்வொரு பணிகளையும் செய்ய தேவையான நிதியை கேரள அதிகாரிகளுக்கு வழங்குவோம்.

முழு கொள்ளளவு தேக்க அனுமதி

மேலும் அணையை சீரமைக்கும் பணி மெசரிங் ஸ்டீல் தொழில் நுட்ப முறையில் செய்யப்படும். இதில் விரிசல் உள்ள பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு பலமாக் கும் பணி நடத்தப்படும்.

மேற்கொண்டு விரிசல் ஏற்படாதவாறு சுவர்களை பலப்படுத்தினால் அணையில் முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்க முடியும். பராமரிப்பு பணி முடிந்த பின்னர் அணையின் முழு கொள்ளளவான 50 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கூட்டத்தில் தமிழக குடிநீர் வடிகால்வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் சீனிவாசன், மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார், சிறுவாணி செயற்பொறியாளர் மீரா, உதவி செயற்பொறியாளர் பட்டன், கேரள மாநில குடிநீர் சப்ளை தலைமை பொறியாளர் ஸ்ரீதேவி, கோழிக்கோடு திட்ட தலைமை பொறியாளர் சிவதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story