பச்சிளம் குழந்தையை கடத்திய கேரள பெண் கைது


பச்சிளம் குழந்தையை கடத்திய கேரள பெண் கைது
x

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை கடத்திய கேரள பெண் கைது செய்யப்பட்டார். போலீசார் துரிதமாக செயல்பட்டு 22 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை கடத்திய கேரள பெண் கைது செய்யப்பட்டார். போலீசார் துரிதமாக செயல்பட்டு 22 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.

குழந்தை கடத்தல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யூனிஸ். இவரது மனைவி திவ்யபாரதி (வயது 25). இவருக்கு கடந்த 29-ந் தேதி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 2-ந் தேதி நள்ளிரவு திவ்வபாரதி குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு, அவரும் தூங்கியதாக தெரிகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்த போது குழந்தை காணாமல் போனதை கண்டு திவ்யபாரதி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமரா பொருத்தாததால் குழந்தையை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

செல்போன் சிக்னல்

பின்னர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு எதிரே வணிக வளாகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோவில் குழந்தையுடன் ஒரு பெண்ணும், சிறுமியும் சென்றது தெரியவந்தது. மேலும் அந்த ஆட்டோ பஸ் நிலையத்தை நோக்கி சென்றதும் அந்த கேமராவில் பதிவாகி இருந்தது. பதிவு எண்ணை வைத்து அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கோவைக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் அவர்களை இறக்கி விட்டதாக கூறினார். மேலும் அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை அரசு ஆஸ்பத்திரி பகுதியில் பதிவான செல்போன் சிக்னல் விவரங்களையும் போலீசார் சேகரித்தனர்.

இதைதொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டுகள் செல்வராஜ், சீனிவாசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ராம்தாஸ், அனந்தநாயகி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தனிப்படை போலீசார் உக்கடம் சென்று விசாரித்த போது ரெயில் நிலையத்தில் கொண்டு சென்று விட்டதாகவும், அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு செல்வதாகவும் ஒரு ஆட்டோ டிரைவர் கூறினார்.

குழந்தை மீட்பு

இதையடுத்து தனிப்படை போலீசார் கோவையில் இருந்து பாலக்காடு வரை உள்ள ரெயில் நிலையங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் பாலக்காடு மாவட்டம் ஒவலக்கோடு ரெயில் நிலையத்தில் குழந்தையை தூக்கி கொண்டு பெண்ணும், சிறுமியும் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

பின்னர் தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கொடுவாயூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அந்த பெண்ணையும், சிறுமியையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஜெமீனா (வயது 34) என்பவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஜெமீனாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பச்சிளம் குழந்தையையும் மீட்டனர். மேலும் அவருடன் இருந்த 14 வயது சிறுமியையும் போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமி ஜெமீனாவின் மகள் என்று கூறப்படுகிறது.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

இதையடுத்து கைதான ஜெமீனா, 14 வயது சிறுமி மற்றும் மீட்கப்பட்ட குழந்தையை போலீசார் பத்திரமாக பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணிக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், தாய் திவ்யபாரதியிடம் குழந்தையை ஒப்படைத்தார். அப்போது அவர் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

கைதான ஜெமீனா மற்றும் சிறுமிக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெமீனாவை போலீசார் சிறையில் அடைத்தனர். அந்த சிறுமியை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் 22 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்து கொடுத்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

250 கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

இதுதொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறியதாவது:-

நேற்று (நேற்று முன்தினம்) அதிகாலை 5.30 மணிக்கு பிறந்து 4 நாட்கள் ஆன குழந்தையை யாரோ கடத்தி விட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்டு 2 இன்ஸ்பெக்டர்கள், 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை தேடும் பணி தொடங்கியது. அதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கடத்தப்பட்ட 22 மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து உள்ளோம்.

பொள்ளாச்சி, கோவை மற்றும் பாலக்காடு வரை 250 கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. குழந்தையை கண்டுபிடிக்க முக்கிய காரணமாக கண்காணிப்பு கேமராக்கள் அமைந்தது. அரசு ஆஸ்பத்திரி, ரெயில் நிலையங்களில் அனைவரும் முழுஒத்துழைப்பு கொடுத்தனர். குற்றங்களை தடுக்க கேமராக்கள் அதிகமாக பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story