கொடைக்கானல் வனப்பகுதியில் சிக்கி தவித்த கேரள வாலிபர்கள்


கொடைக்கானல் வனப்பகுதியில் சிக்கி தவித்த கேரள வாலிபர்கள்
x
தினத்தந்தி 5 Jan 2023 7:15 PM GMT (Updated: 5 Jan 2023 7:15 PM GMT)

போதை காளானை தேடிச்சென்றபோது கொடைக்கானல் வனப்பகுதியில் சிக்கி தவித்த 2 வாலிபர்கள், 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.

திண்டுக்கல்

புத்தாண்டு கொண்டாட்டம்


கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, கடந்த 1-ந்தேதி கொடைக்கானலுக்கு காரில் வந்தனர். இவர்கள், மேல்மலைக்கிராமமான பூண்டி பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் தங்குவதற்கு அறை இல்லாததால் காரிலேயே தங்கினர்.


அடுத்த நாளில் கரடு முரடான மலைப்பாதை வழியாக காரில் சென்ற அவர்கள், அந்த கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் விவசாயிகள் அமைத்திருந்த குடிசையில் தங்கினர்.


போதை காளான்


இந்தநிலையில் அங்குள்ள வனப்பகுதியில் போதை காளான்கள் இயற்கையாக முளைத்திருக்கும் தகவல் அவர்களுக்கு கிடைத்தது.


இதனையடுத்து வனப்பகுதிக்கு சென்று அவர்கள், போதைகாளான்களை பறிக்க முடிவு செய்து அங்கு சென்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 5 கிலோமீட்டர் வரை பயணித்த அவர்கள் தனித்தனியாக சென்று போதை காளான்களை தேடியதாக தெரிகிறது. இதில் 23 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வழிதவறி அடர்ந்த வனப்பகுதிக்குள் சிக்கி கொண்டனர். திரும்பி செல்ல வழி தெரியாமல் தவித்தனர்.


இதனையடுத்து மற்ற 3 பேரும் அவர்களை தேடினர். இருப்பினும் அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. செல்போன்களிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.


2 பேர் மீட்பு


இதுகுறித்து கோட்டயம், கொடைக்கானல் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இரு மாநில போலீசார், வனத்துறையினர் பூண்டி வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


இதற்கிடையே காணாமல் போன 2 பேரும் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதிக்குள் இருந்தனர். வழிதெரியாமல் தவித்த அவர்களை, அங்கு விறகு சேகரிக்க சென்ற மலைக்கிராம மக்கள் பார்த்தனர்.


பசியால் சோர்வடைந்து காணப்பட்ட அவர்களுக்கு தாங்கள் கொண்டு சென்ற உணவு, தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவர்கள், கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், போதை காளான் பறிக்க சென்று பாதை மாறி அடர்ந்த வனப்பகுதியில் 3 நாட்களாக அவர்கள் பரிதவித்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story