சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஓராண்டு தலைமறைவாக இருந்த கேரள வாலிபர் சென்னையில் கைது
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஓராண்டு தலைமறைவாக இருந்த கேரள வாலிபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கோஷ்துர்க் போலீஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் பட்டிலாத்து (வயது 38). இவர் மீது கோஷ்துர்க் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.
இவர் போலீசாரிடம் சிக்காமல் கடந்த ஓராண்டாக தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். வெளிநாட்டிற்கு அவர் தப்பி சென்று விட்டார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. பின்னர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. இந்தநிலையில் மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு அபுபக்கர் வந்தார்.
அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்து பயணிகளை அனுப்பியபடி இருந்தனர். அந்த வகையில் அபுபக்கரின் பாஸ்போர்டை ஆய்வு செய்த போது அவர் சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்டவர் என்பது தெரிய வந்தது. உடனே அவரை அதிகாரிகள் பிடித்து காசர்கோடு மாவட்ட தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து கேரளா கொண்டு வந்தனர்.