கேரளாவில் சுட்டுக்கொல்லப்படும் காட்டுப்பன்றிகள்


கேரளாவில் சுட்டுக்கொல்லப்படும் காட்டுப்பன்றிகள்
x
திருப்பூர்


கேரளாவில் காட்டுப்பன்றிகள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், நமது பகுதிகளில் சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புலிகள் காப்பகம்

இன்றைய நிலையில் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், காட்டுப்பன்றிகளும் மயில்களும் கூடுதல் இழப்புகளை உருவாக்கி வருகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அதிக எண்ணிக்கையில் காட்டுப்பன்றிகள் உள்ளன. இந்த நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக இடம் பெயர்ந்த காட்டுப்பன்றிகள் ஊருக்குள் நுழைந்தன. வனப்பகுதியிலிருந்து பல கிலோமீட்டர் தூரம் ஊடுருவியுள்ள காட்டுப்பன்றிகள் அங்குள்ள புதர்களில் பதுங்கிக் கொள்கின்றன.மேலும் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பாமல் ஊரை ஒட்டிய பகுதிகளிலேயே தங்கி, அங்கேயே இனப்பெருக்கம் செய்து பெருகி விட்டன.காட்டுப்பன்றிகள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வேட்டை விலங்குகள் இல்லாத நிலையில் நாளுக்கு நாள் அதிவேகமாக காட்டுப்பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வனவிலங்கு பட்டியல்

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் கூட்டம் கூட்டமாக நுழையும் காட்டுப் பன்றிகள் மக்காச்சோளம், நெல், தென்னை உள்ளிட்ட அனைத்துவிதமான பயிர்களையும் மிதித்தும், தோண்டியும், தின்றும் சேதப்படுத்தி வருகின்றன.மேலும் காட்டுப்பன்றிகளால் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே வனப்பகுதிக்கு வெளியே உள்ள காட்டுப்பன்றிகளை வன விலங்குப்பட்டியலிலிருந்து நீக்கி அவற்றை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது. இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட காட்டுப்பன்றிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு சுற்றிலும் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் நிற்கும் வீடியோவை விவசாயிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உற்சாகம்

மேலும் அந்த வீடியோவில், இறந்த காட்டுப்பன்றிகளை ஒருவர் ஓன்று.இரண்டு.என 50 வரை எண்ணுகிறார். அத்துடன் உற்சாகக் கூச்சலிடும் மக்கள் துப்பாக்கியுடன் நிற்கும் வனத்துறை அதிகாரியை கட்டியணைத்து உற்சாகத்தை தெரிவிக்கின்றனர்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள விவசாயிகள்'கேரளாவில் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல தொடங்கி விட்டார்கள். நம்ம ஊரில் எப்போது சுடப்போகிறீர்கள்? என்று வனத்துறைக்கு கேள்வியெழுப்பியுள்ளனர். காட்டுப்பன்றிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.


Next Story