தீபாவளி பண்டிகையையொட்டி கதர் துணிகள் சிறப்பு விற்பனை; கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்
தீபாவளி பண்டிகையையொட்டி கதர் துணிகள் சிறப்பு விற்பனையை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.
கதர் துணிகள் சிறப்பு விற்பனை
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் காந்தியடிகளின் 155-வது பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளியையொட்டி கதர் துணிகளின் சிறப்பு விற்பனை தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.
விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி கதர் விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முதல் விற்பனையை கலெக்டர் பழனி தொடங்கி வைக்க, அதனை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) கலைமாமணி பெற்றுக்கொண்டார்.
சிறப்பு தள்ளுபடி
அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் பழனி கூறுகையில், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு ரூ.1 கோடியே 50 லட்சம் முழுமையாக எய்தப்பட்டது. நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 55 லட்சம் விற்பனை குறியீடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை முழுமையாக எய்த வேண்டும். காதி கிராப்டில் இந்த ஆண்டும் சிறப்பு விற்பனையாக கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆகிய ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றார்.
இவ்விழாவில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், கதர் ஆய்வாளர் ஜெயக்குமார், விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், பணியாளர்கள் ராஜகோபால், சிவக்குமார், கோவிந்தராஜ், சுரேஷ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.