கியாஸ் சிலிண்டர் ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்கள் திடீர் வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு வழங்கக்கோரி தூத்துக்குடியில் கியாஸ் சிலிண்டர் ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு வழங்கக்கோரி தூத்துக்குடியில் கியாஸ் சிலிண்டர் ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கியாஸ் சிலிண்டர்
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் எல்.பி.ஜி. கியாஸ் கொண்டு வரப்படுகிறது. அந்த நிறுவனத்தில் வைத்து சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பப்பட்டு, லாரிகள் மூலம் வினியோகத்துக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் தினமும் சுமார் 21 ஆயிரம் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் சுமார் 100 லாரிகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த லாரி டிரைவர்கள் ஊதிய உயர்வு கேட்டு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திடீர் போராட்டம்
இந்த நிலையில் நேற்று திடீரென லாரி டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லாரிகளை நிறுவனத்திற்கு கொண்டு செல்லாமல் வெளியில் நிறுத்தி வைத்தனர்.
மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவன சிலிண்டர் லாரி டிரைவர்களுக்கு 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும். டிரைவர்களை இ.எஸ்.ஐ., பி.எப். திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஆண்டுதோறும் சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும். டிரைவர்களின் சட்ட உரிமைகளை மறுக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி பாரத் கியாஸ் ஓட்டுனர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்மாடசாமி என்ற பாஸ்கர், பொருளாளர் முருகபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைத்தலைவர்கள் கணேஷ்குமார், முத்தையாபாண்டியன், மலைச்சாமி, யோகராஜா, துணை செயலாளர்கள் லட்சுமணன், அருணாச்சலம், பாலசுப்பிரமணியன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு டிரைவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.