பொதுமக்களுக்கு கிடா வெட்டி விருந்து


பொதுமக்களுக்கு கிடா வெட்டி விருந்து
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை ரஸ்தா பகுதியில் நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பாலம் பணி நிறைவு பெற்றதையடுத்து அந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்தினர் பொதுமக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்தனர்.

சிவகங்கை

காரைக்குடி,

தேவகோட்டை ரஸ்தா பகுதியில் நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பாலம் பணி நிறைவு பெற்றதையடுத்து அந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்தினர் பொதுமக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்தனர்.

மேம்பால பணி நிறைவு

மத்திய அரசின் போக்குவரத்து துறை சார்பில் காரைக்குடி முதல் ராமநாதபுரம் வரை பைபாஸ் சாலை அமைக்கும் பணிக்காக ரூ.320 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இந்த பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றது. இந்த பைபாஸ் சாலையில் ரஸ்தாவில் ரெயில்வே மேம்பாலமும், தேவிபட்டினம், புளியால், தொண்டி ரோடு உள்ளிட்ட 5 இடங்களில் உயர் மேம்பாலங்களும், 3 இடங்களில் சிறிய பாலங்களும் அமைக்கப்பட்டது.

இதில் காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா ரெயில்வே கிராசிங் பகுதியை கடக்க சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் அமைக்க ரூ.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு இந்த பணி தொடங்கப்பட்டு கடந்தாண்டு நிறைவு பெறும் வகையில் இருந்தது. கொரோனா தடை காரணமாக இந்த பணி கூடுதலாக ஓராண்டிற்கும் மேல் நடைபெற்றது. இந்நிலையில் இந்த பணியை ராமநாதபுரத்தை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த ரெயில்வே மேம்பாலம் பணி 99 சதவீதம் நிறைவு பெற்று வருகிற ஜனவரி மாதம் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வருகிறது.

கிடா விருந்து

இந்நிலையில் நேற்று காலை புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் அருகே அந்த பகுதியை சேர்ந்த 300 பேருக்கு விருந்து அளிக்கும் வகையில் அந்த ஒப்பந்த நிறுவனத்தினர் அங்கு கிடா வெட்டி கமகமக்கும் சமையல் செய்தனர். பின்னர் அங்கிருந்த சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் 2 மணிக்கு அந்த பகுதி மக்களுக்கும், பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கும் கிடா விருந்து வைத்தனர். மேலும் அவ்வழியாக சென்றவர்களும் அங்கு வந்து கிடா விருந்து சாப்பிட்டு சென்றனர்.

இதுகுறித்து அந்த ஒப்பந்த நிறுவனத்தினர் கூறியதாவது:- ரஸ்தா ரெயில்வே மேம்பாலம் பணி தற்போது 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் சில தினங்களில் பணி முழுவதும் நிறைவு பெற்று ஜனவரி மாதம் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. எவ்வித தடங்கலும் இல்லாமல் இந்த பணி நிறைவு பெற்றதாலும், இப்பகுதி மக்களும் பணிக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாலும் அவர்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க முடிவு செய்து விருந்து வைத்தோம் என்றனர்.


Next Story