நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி ரூ.7 கோடி கேட்டு மிரட்டிய 4 பேர் கைது


நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி ரூ.7 கோடி கேட்டு மிரட்டிய 4 பேர் கைது
x

மதுரையில் நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி ரூ.7 கோடி கேட்டு மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரையில் நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி ரூ.7 கோடி கேட்டு மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நிதி நிறுவன உரிமையாளர் மாயம்

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் நாகநந்தினி. இவர் புதூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், எனது கணவர் பாலாஜி கடந்த வாரம் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அவரை திடீரென்று காணவில்லை என்று அதில் தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலாஜியும், விருதுநகரை சேர்ந்த சுப்பிரமணியனும் கடந்த 2020-ம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றை மதுரை காளவாசல் பகுதியிலும், 2022-ம் ஆண்டு விருதுநகர் கச்சேரி ரோட்டில் நகைக்கடையும் தொடங்கி நடத்தி வந்தனர்.

ரூ.7 கோடி கேட்டு மிரட்டல்

அந்த கம்பெனியில் வாடிக்கையாளர்களின் ரூ.1 லட்சம் முதலீட்டிற்கு மாதம் 7 ஆயிரம் ரூபாயும், 12 மாதங்கள் முடிந்த பின் அசல் ஒரு லட்சம் ரூபாயும் திருப்பி கொடுப்பதாக தெரிவித்தனர். மேலும் நகைக்கடையில் மாதமாதம் தவணை தொகை கட்டுபவர்களுக்கு ஆண்டு இறுதியில் கட்டிய தொகைக்கு ஈடாக செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்க ஆபரணமாக கொடுப்பது என்ற நிபந்தனையில் 2,300 வாடிக்கையாளர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீடுகளை பெற்று திருப்பி தராமல் இருந்துள்ளனர்.

இந்தநிலையில் சுப்பிரமணியன் தற்கொலை செய்து இறந்துவிட பாலாஜி வாடிக்கையாளர்களின் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஆலோசனை நடத்தினர். அப்போது தங்களுக்கு ரூ.7 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்பு பாலாஜி, அவரது மைத்துனர் கார்த்திகேயன், டிரைவர் சபரீஸ் ஆகியோருடன் விடுதியில் இருந்து காரில் திண்டுக்கல் நோக்கி சென்றனர்.

4 பேர் கைது

அப்போது அந்த கம்பெனியின் பிரதிநிதிகளான அருப்புக்கோட்டை வெங்கடேஸ், திருச்செல்வம், கோவில்பட்டி விஜய் ஆகியோர் தூண்டுதலின் பேரில் புதூர் வக்கீல் மணிமாறன், அழகுராஜா, முத்துராமன், சிக்கந்தர்சாவடி மைக்கேல், வில்லாபுரம் மாரி மற்றும் 2 பேர் சேர்ந்து காரில் சென்ற அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அவர்களை ஆலாத்தூர் என்ற இடத்தில் வழிமறித்து காருடன் அவர்கள் 3 பேரை கடத்தி கோவில்பட்டியில் அடைத்து வைத்து ரூ.7 கோடி கேட்டு அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

போலீசில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து பாலாஜி உள்ளிட்ட 3 பேர் விடுக்கப்பட்டு அதே காரில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து திருச்செல்வம்(35), வக்கீல் மணிமாறன்(37), அழகுராஜா(40), முத்துராமன்(35) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story