கடத்தப்பட்ட 4 மாத குழந்தைகேரளாவில் மீட்பு
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கடத்தப்பட்ட 4 மாத குழந்தையை கேரளாவில் தனிப்படையினர் மீட்டனர். இதுதொடர்பாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கடத்தப்பட்ட 4 மாத குழந்தையை கேரளாவில் தனிப்படையினர் மீட்டனர். இதுதொடர்பாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
4 மாத குழந்தை கடத்தல்
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய பகுதியில் தங்கி ஏராளமானோர் ஊசி, பாசிமாலை உள்ளிட்டவற்றை வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பூங்காநகர் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த முத்துராஜா (வயது 24) என்பவர் தனது மனைவி ஜோதிகா (20) மற்றும் 4 மாத ஆண் குழந்தையுடன் தங்கி வியாபாரம் செய்தார். அந்த குழந்தையின் பெயர் ஹரி. வழக்கம் போல் கடந்த 23-ந் தேதி இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் பஸ்நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதிகாலையில் முத்துராஜா கண்விழித்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். தன்னுடைய அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. உடனே பதற்றத்துடன் அவர் அங்கிருந்த பயணிகள் மற்றும் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி விசாரித்தார். அப்போது நள்ளிரவில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச் சென்றதாகவும், அந்த குழந்தை அவருடையது என நினைத்ததாகவும் கூறினர்.
இதனால் பதறிப்போன முத்துராஜா வடசேரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நாகர்கோவில் பஸ்நிலையத்தில் குழந்தையை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்படை அமைப்பு
இதனை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பஸ் நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காட்சியை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் பெண் ஒருவர் முத்துராஜாவின் குழந்தையை தூக்கிச் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் குழந்தையை கடத்திச் சென்ற பெண் யார்? என்பது குறித்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
அதே சமயத்தில் குழந்தையை மீட்க நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மேற்பார்வையில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து ஆய்வு செய்ததில் கேரளாவுக்கு குழந்தை கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதனால் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது.
கேரளாவில் குழந்தை மீட்பு
இந்தநிலையில் கொல்லம் ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு குழந்தையுடன் கணவன், மனைவி சுற்றித்திரிவதாக கொல்லம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் 2 பேரையும் கண்காணித்தனர்.
இதைத்தொடர்ந்து இருவரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர்கள் கன்னியாகுமாி அருகே உள்ள வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்த நாராயணன் (48), அவரது மனைவி சாந்தி (50) என்பது தெரியவந்தது. மேலும் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்பு கொண்டனர்.
கணவன்-மனைவி கைது
குழந்தை மீட்கப்பட்டது குறித்து வடசேரி போலீசுக்கு கேரள போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை கடத்திய நாராயணன், சாந்தியையும் கைது செய்து நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் இதுபோன்று பல்வேறு இடங்களில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மீட்கப்பட்ட குழந்தையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வடசேரி போலீஸ் நிலையத்தில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்தார். மீண்டும் குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோர் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.