உசிலம்பட்டியில் 4 வயது சிறுமி கடத்தலா?


உசிலம்பட்டியில் 4 வயது சிறுமி கடத்தலா?
x

உசிலம்பட்டியில் 4 வயது சிறுமி கடத்தப்பட்டதாக தகவல் பரவியது. கண்காணிப்பு கேமராவில் சிறுமியை தம்பதி தூக்கி சென்ற காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டியில் 4 வயது சிறுமி கடத்தப்பட்டதாக தகவல் பரவியது. கண்காணிப்பு கேமராவில் சிறுமியை தம்பதி தூக்கி சென்ற காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

4 வயது சிறுமி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் பார்த்தசாரதி.(வயது 40) பேக்கரி கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி சத்யா(35). இவர்களது ஒரே மகள் ஜனனி(4).

உசிலம்பட்டி-மதுரை சாலையில் உள்ள சேம்பர் பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் விடுமுறை நாட்களில் சிறுமி ஜனனி சென்று விளையாடுவது வழக்கம். நேற்று விடுமுறை தினம் என்பதால் பாட்டி வீட்டிற்கு ஜனனி சென்றிருந்தாள்.

இந்நிலையில் பாட்டி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஜனனியை திடீரென்று காணவில்லை. இதனால் பதறி போன சிறுமியின் தந்தை பார்த்தசாரதி உசிலம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

சிறுமியை தூக்கி சென்ற தம்பதி

புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த உசிலம்பட்டி துணை சூப்பிரண்டு நல்லு தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கணவன்-மனைவி இருவரும் சிறுமியை தூக்கி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையை துரிதப்படுத்தி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சந்தேகப்படும்படி சிறுமியுடன் வந்த சில்லாம்பட்டியைச் சேர்ந்த குமார்-மகேஸ்வரி தம்பதியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை அவர்கள் தான் தூக்கி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரித்ததில் ேபாலீசாருக்கு சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

விருந்துக்கு அழைத்து சென்றனர்

தம்பதி இருவரும் அடிக்கடி சிறுமியின் பாட்டி வீட்டு அருகே உள்ள கோழி கறிக்கடைக்கு கறி வாங்க வருவது வழக்கம். அப்போது பாட்டி வீட்டு முன்பு விளையாடும் சிறுமிக்கும், தம்பதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று வழக்கம்போல கறி வாங்க வந்திருந்த போது சிறுமியை கண்ட மகேஸ்வரி தூக்கி கொஞ்சிவிட்டு வீட்டுக்கு வருகிறாயா? என அழைத்து இருக்கிறார்.

அதற்கு அந்த சிறுமி, தனது வீட்டிற்கு சென்று செருப்பு அணிந்து கொண்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி வந்ததாக கூறப்படுகிறது. சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து தாங்கள் வாங்கி வந்த கறியை சமைத்து குழந்தையை சாப்பிட வைத்துவிட்டு மீண்டும் வீட்டில் வந்து விட வரும் போது சிறுமியை காணவில்லை என பரபரப்பு ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியை அழைத்து சென்ற போது மகேஸ்வரி, சிறுமியின் தாயிடம் கூறி விட்டு சென்று இருக்கிறார். குழந்தையை தம்பதி அழைத்து சென்றதை சிறுமியின் தாய் மறந்து போனதாலும், தந்தை போலீசில் புகார் அளித்ததாலும் உசிலம்பட்டி பகுதியில் சிறுமி கடத்தப்பட்டதாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. விசாரணைக்கு பின் சிறுமியை அழைத்து சென்ற தம்பதியை போலீசார் விடுவித்தனர்.


Related Tags :
Next Story