சிறுமியை கடத்திச்சென்று 4-வது திருமணம் செய்தவர் கைது


சிறுமியை கடத்திச்சென்று 4-வது திருமணம் செய்தவர் கைது
x

சிறுமியை கடத்திச்சென்று 4-வதாக திருமணம் செய்தவர் உளுந்தூர்பேட்டையில் சிக்கினார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

சிறுமியை கடத்திச்சென்று 4-வதாக திருமணம் செய்தவர் உளுந்தூர்பேட்டையில் சிக்கினார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

சிறுமியுடன் 4-வது திருமணம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள பொதிக்குளத்தை சேர்ந்தவர் சதீஸ் (வயது 38). இவர் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் மற்றொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்தியதாக கூறப்படுகிறது.

அந்த 2 பெண்களும் அவரைவிட்டு பிரிந்த நிலையில், 3-வதாக இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்தார்.

பின்னர் சொந்த ஊரை விட்டு, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சின்னகட்டங்குடிக்கு வந்தார். அங்கு தன்னுடைய 3-வது மனைவியுடன் சில ஆண்டுகளாக சதீஸ் வசித்து வந்தார். இந்த நிலையில் ஒரு 17 வயது சிறுமியிடம் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அப்போது, தனக்கு ஏற்கனவே 3 மனைவிகள் இருப்பதை மறைத்து, அவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி இருக்கிறார். அந்த சிறுமியை நைசாக வீட்ைட விட்டு வெளியே வரவழைத்து கடத்தி சென்று அவரை 4-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

போக்சோ வழக்கு

இந்த நிலையில் சிறுமியை உறவினர்கள், குடும்பத்தினர் தேடிவந்த நிலையில், இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், சதீஸ் அவரை கடத்திச்சென்றது தெரியவந்தது.

சிறுமியை மீட்க போலீசார் தீவிரமாக துப்பு துலக்கினர். பின்னர் ரகசிய தகவலின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு சென்று அந்த சிறுமியை மீட்டனர். சதீசையும் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது. அந்த சிறுமி விருதுநகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச்சென்று 4-வது திருமணம் செய்த நபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.


Related Tags :
Next Story