கேரளாவுக்கு காரில் கடத்திய1,440 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து காரில் கேரளாவுக்கு கடத்திய 1,440 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கார் டிரைவரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து காரில் கேரளாவுக்கு கடத்திய 1,440 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கார் டிரைவரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
வாகன தணிக்கை
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் புதியம்புத்தூர்-ஓட்டப்பிடாரம் மெயின் ரோட்டில் புதியம்புத்தூர் இசக்கியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
ரேஷன் அரிசி
அந்த காரில் ரேஷன் அரிசி மூட்டைககள் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. அப்போது, காரில் இருந்த ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த முருகன் என்ற துரை என்பவர் தப்பி ஓடினார். இதனால் உஷாரான போலீசார் கார் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி துவரங்காட்டை சேர்ந்த சுந்தரம் மகன் மகேஷ்குமார் (வயது 32) என்பவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் காரில் 40 கிலோ எடை கொண்ட 36 மூட்டைகளில் மொத்தம் 1,440 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
கைது
இதனை தொடர்ந்து துத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புதியம்புத்தூர் பகுதியில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, நாகர்கோவிலை சேர்ந்த ஜெகன் என்பவர் மூலம் கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. உடனடியாக கார் மற்றும் 1440 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகன் என்ற துரை, ஜெகன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.