கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 8 மணி நேரத்தில் காஞ்சீபுரத்தில் மீட்பு
வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 8 மணி நேரத்தில் காஞ்சீபுரத்தில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குழந்தை கடத்தல்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலா. இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. சூரிய கலாவுக்கு இது 3-வது குழந்தை என்பதால் அவருக்கு கருத்தடை சிகிச்சை செய்ய வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சூரியகலாவுடன் குழந்தையும் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5.30 மணிக்கு சூரியகலா இருந்த வார்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த பத்மா என்பவர் வந்தார். ்அவர் சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவு கொடுத்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சூரியகலா சிறிது நேரத்தில் மயங்கி விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூரியகலாவின் ஆண் குழந்தையை பத்மா கடத்தி சென்று விட்டார்.
இதுகுறித்து சூரியகலா மற்றும் உறவினர்கள் வேலூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
4 தனிப்படை
இதனைத்தொடர்ந்து குழந்தையை கண்டுபிடிக்க வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் தலைமையில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
போலீசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பத்மா குழந்தை கடத்தி செல்வது பதிவாகி இருந்தது.
மேலும் அவர் திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் ஏறி தப்பி சென்றது தெரிந்தது. அதைத்தொடர்ந்து அவர் பயணம் செய்த வழித்தடங்களில் பொருத்தப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
பெண் கைது
அதன் மூலம் 8 மணி நேரத்தில் காஞ்சீபுரத்தில் பத்மா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்று பத்மாவை கைது செய்து குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை, தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், குழந்தையை கடத்திய பத்மா மற்றும் அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 மாவட்ட போலீசார்
இந்த நிலையில் குழந்தை கடத்திய பெண் கைது செய்யப்பட்டது தொடர்பாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் ஸ்ருதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, நாகராஜன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
முதற்கட்டமாக குழந்தையை கடத்திய பெண் விட்டு சென்ற பை சோதனை செய்யப்பட்டது. அதில் அந்த பெண் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் நகை அடமானம் வைத்த ரசீது இருந்தது. அந்த ரசீதில் இருந்த முகவரி, பெயர் மூலம் குழந்தையை கடத்தி பெண் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா என்பதும் தெரியவந்தது.
பஸ் நிலையத்தில்...
இதையடுத்து அவரின் புகைப்படம் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, இரவு ரோந்து போலீசார் பஸ், ரெயில் நிலையங்களில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பத்மா நிற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
குழந்தையை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்து உரிய பாதுகாப்புடன் வேலூருக்கு கொண்டு வந்தனர். பத்மாவின் 2-வது கணவர் ராஜா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிடிபட்டார்.
பத்மா மற்றும் ராஜாவிடம் நடத்திய விசாரணையில், பத்மாவிற்கு முதல் கணவர் திருநாவுக்கரசு மூலம் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பத்மா முதல் கணவரை பிரிந்து ராஜாவுடன் வாழ்ந்து வந்தார்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில்
பத்மாவின் 3 குழந்தைகளும் முதல் கணவரிடம் உள்ளனர். ராஜா, பத்மா இடையே குழந்தை இல்லாத நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பத்மா கருவுற்றிருப்பதாக ராஜாவிடம் கூறி உள்ளார். மேலும் அவர் கடந்த 6 மாதங்களாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் தான் பத்மா நேற்று முன்தினம் தனக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும், தன்னை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றி இருப்பதாகவும், அங்கு பொருட்களை கொண்டு வருமாறு ராஜாவிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து திருவண்ணாமலையை சேர்ந்த சுந்தர்-சூரியகலா தம்பதியினரின் ஆண் குழந்தையை பத்மா கடத்தி சென்றுள்ளார்.
ராஜா, பத்மா ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடத்தப்பட்ட 8 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்ட போலீசாரின் துரித நடவடிக்கையால் குழந்தை உடனடியாக மீட்கப்பட்டது. பின்னர் குழந்தை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி ஆகியோருக்கு, குழந்தையின் தாய் நன்றி தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பிரசன்னகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பத்மாவிடம் விசாரணை நடத்தினார்.