நிதிநிறுவன பங்குதாரரை காரில் கடத்திய கும்பல்
ராமநாதபுரத்தில் நிதிநிறுவன பங்குதாரரை காரில் கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் நிதிநிறுவன பங்குதாரரை காரில் கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நிதி நிறுவனம்
தமிழகம் முழுவதும் தனியார் நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நிதி நிறுவனத்தின் சோழவந்தான் கிளையில் பங்குதாரராக இருந்ததோடு வழக்கில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள காரைக்குடி சாமியார்தோப்பு பழனியப்பன் (வயது42), மதுரை சோழவந்தான் ஆலங்கொட்டாரம் மருதுபாண்டி (39), ராஜூ, மோகன்தாஸ் ஆகியோர் ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவில் கையெழுத்திட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 4 பேரும் தேவிபட்டினத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து கையெழுத்திட்டு வந்தனர்.
பழனியப்பன் உள்ளிட்ட 4 பேரும் ராமநாதபுரத்திற்கு வந்து கையெழுத்திட்டு செல்வதை அறிந்த நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பையா என்ற சுரேஷ், முருகன், மற்றும் மேலும் 2 பேர் ராமநாதபுரம் வந்து இவர்களை கண்காணித்துள்ளனர். இவர்கள் குறித்த விபரங்களை நிதி நிறுவனத்தில் ஏமாந்திருந்த புக்குளம் முத்துபிரகாஷ் (35) நோட்டமிட்டு தெரிவித்துள்ளார்.
காரில் கடத்தல்
சம்பவத்தன்று அவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் வந்து கையெழுத்திட்டு விட்டு தேவிபட்டினத்திற்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ராமநாதபுரம் அருகே பழங்குளம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது சுரேஷ் உள்ளிட்டோர் காரில் விரட்டி சென்று வழிமறித்தனர். அதில் பழனியப்பன், மருதுபாண்டி ஆகியோரை மறித்ததும் பின்னால் வந்த ராஜூ, மோகன்தாஸ் ஆகியோர் சுதாரித்து தப்பிவிட்டனர். இதற்கிடையே காரில் இருந்தவர்கள் பழனியப்பனை தாக்கி பணம் எங்கே எனக்கேட்டு மிரட்டி காரில் ஏற்றி உள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சில் ஏறி மருதுபாண்டி தப்பிவிட்டார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மருதுபாண்டி தேவிபட்டினம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவிட்டார். இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் பழனியப்பனை அவர்கள் சென்னைக்கு கொண்டு சென்றது தெரிந்தது.
பரபரப்பு
இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த சுரேஷ் உள்ளிட்டோர் பழனியப்பனை சென்னையில் விட்டுவிட்டு தப்பி சென்றார். இதையடுத்து பழனியப்பனை போலீசார் மீட்டு ராமநாதபுரம் கொண்டு வந்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் முத்துபிரகாஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.