ரூ.46 லட்சத்தை திருப்பி கேட்ட தொழில்அதிபர் காரில் கடத்தல்
பரமக்குடியில் வீடு வாங்க கொடுத்த ரூ.46 லட்சத்தை திருப்பி கேட்ட தொழில் அதிபர் காரில் கடத்தப்பட்டார். இது ெதாடர்பாக 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
பரமக்குடி,
பரமக்குடியில் வீடு வாங்க கொடுத்த ரூ.46 லட்சத்தை திருப்பி கேட்ட தொழில் அதிபர் காரில் கடத்தப்பட்டார். இது ெதாடர்பாக 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
தொழில் அதிபர்
பரமக்குடி அருகே உள்ள பகைவென்றி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 56). தொழில் அதிபர். இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பரமக்குடி- ராமேசுவரம் நான்கு வழி சாலை முத்துச்செல்லாபுரம் விலக்கு ரோட்டில் திருமண மண்டபம் கட்டி வருகிறார். அந்த கட்டிடத்தில் மேலாளராக பணியாற்றி வந்த விக்கிரவாண்டி வலசை கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் வீடு ஒன்று விலைக்கு வருவதாக கூறி பழனிச்சாமியிடம் ரூ.46 லட்சம் வாங்கி அந்த அந்த வீட்டை பாலமுருகன் பெயரில் ஆவணம் பதிவு செய்துள்ளார்.
இந்த வீட்டு ஆவணப்பதிவு சம்பந்தமாக 2 மாதங்களுக்கு முன்பு பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்ட குற்ற பிரிவு போலீசில் இது குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 12-ந் தேதி பழனிச்சாமியை பாம்பு விழுந்தான் பகுதியில் வசித்து வரும் செல்வகுமார் (46) என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக பணத்தை பாலமுருகன் கொடுத்து விடுவார் என முடிவு செய்யப்பட்டுள்ளது. வந்து பெற்றுக் கொள்ளவும் எனக் கூறியுள்ளார்.
காரில் கடத்தல்
அதை நம்பி பழனிச்சாமியும் செல்வகுமார் வீட்டிற்கு சென்றார்.. வீட்டின் கீழ் பகுதியில் உள்ள குடோனுக்கு சென்றபோது விக்கிரவாண்டி வலசை கிராமத்தைச் சேர்ந்த உத்திரகுமார், பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த். கீழக்கன்னிச்சேரியை சேர்ந்த நேரு முருகன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் இருந்துள்ளனர். வெளியில் நின்ற நபர் குடோன் சட்டரை அடைத்துள்ளார். உடனே செல்வகுமார் பழனிச்சாமியை சேரில் உட்கார சொல்லி சென்று விட்டார். பின்பு அங்கிருந்த உத்திரகுமார், ஆனந்த், நேருமுருகன் ஆகியோர் பழனிச்சாமியின் கைகால்களை கயிற்றால் கட்டி, முகத்தை மூடி, வாயில் துணியை திணித்து, அங்கிருந்த காரில் ஏற்றி கொண்டு ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று உள்ளனர்.
5 பேர் மீது வழக்கு
பின்பு அவரிடம் கட்டுமானம் இடத்தின் பத்திரம், பாலமுருகன் பெயரில் உள்ள வீட்டு பத்திரம், மற்றும் பல ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து பழனிச்சாமி டிரைவர் சுரேஷ் என்ற கனகராஜ்க்கு போன் செய்து காரில் வரும் நபர்களிடம் பத்திரங்களை கொடுக்குமாறு கூறியுள்ளார். அவரும் கொடுத்துள்ளார். பின்பு பழனிச்சாமியை அவர்கள் பகை வென்றி கிராமத்திற்கு காரில் அழைத்துச் சென்று மீதமுள்ள ஆவணங்களையும் எடுத்து வரச் சொல்லி அங்கு இறக்கி விட்டுள்ளனர். உடனே பழனிச்சாமி, வீட்டுச்சாவி பக்கத்து வீட்டில் உள்ளது. வாங்கி வருகிறேன் எனக் கூறி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அங்கிருந்து ஆட்கள் வருவதற்குள் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.மேலும் இது குறித்து அவர் எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகார் அடிப்படையில் உத்திரகுமார், செல்வகுமார், ஆனந்த், நேரு முருகன் மற்றும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.