மதுரை ரெயில் நிலையத்தில் 3 மாத குழந்தை கடத்தல்


மதுரை ரெயில் நிலையத்தில் 3 மாத கைக்குழந்தையை கடத்தியதாக வாலிபர் மற்றும் அவரது தோழியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

மதுரை ரெயில் நிலையத்தில் 3 மாத கைக்குழந்தையை கடத்தியதாக வாலிபர் மற்றும் அவரது தோழியை போலீசார் கைது செய்தனர்.

கைக்குழந்தை கடத்தல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மட்டப்பாறையை சேர்ந்தவர் அரிஷ்குமார் (வயது 27). இவர் மதுரை காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த சையதுஅலிபாத்திமா (25) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஆண் குழந்தையும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் நாகூர் தர்காவிற்கு செல்வதற்காக மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அந்த ரெயில் அதிகாலை நேரத்தில் இருப்பதால் இரவே அவர்கள் மதுரை ரெயில் நிலையம் முன்புள்ள விநாயகர் கோவில் பகுதியில் குடும்பத்துடன் வந்து தங்கினர். நள்ளிரவு நேரத்தில் சையதுஅலி பாத்திமா கண்விழித்த போது அவரது 3 மாத கைக்குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டுள்ளார். அப்போது இரவு ரோந்து வந்த திலகர்திடல் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தபோது அவரது கைக்குழந்தையை யாரோ கடத்தி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் அந்த பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுமார் 30 முதல் 35 வயதுடைய ஒருவர் குழந்தையை தூக்கி கொண்டு ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சென்று இருப்பது தெரியவந்தது. உடனே குழந்தையை கடத்தியவர்களை இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடினர். அதில் குழந்தையை கொண்டு சென்றவரை சந்தைபேட்டை பகுதியில் வைத்து போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த போஸ்(35) என்பதும், இவர் ஒரு வழக்கில் கைதாகி சில தினங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தோழியுடன் வாலிபர் கைது

போஸ்சை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி மாதம் ரெயிலில் குண்டு வைத்ததாக இவர் புரளியை கிளப்பியதால் போலீசார் அவரை கைது செய்தனர். அவரை திருப்பத்தூரை சேர்ந்த அவரது பள்ளி தோழியும், 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவருமான கலைவாணி ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார். இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் ஒரு கைக்குழந்தை இருப்பதாக தோழியிடம் போன் மூலம் போஸ் தெரிவித்துள்ளார். அந்த குழந்தையை கடத்தி விற்க இருவரும் முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் குழந்தை கடத்தியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து போஸ் மற்றும் கலைவாணியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story