வாடகைக்கு எடுத்துச்சென்ற காரை சேதப்படுத்தியதால் ரூ.2 லட்சம் கேட்டு கல்லூரி மாணவர்கள் கடத்தல் - 5 பேர் கைது


வாடகைக்கு எடுத்துச்சென்ற காரை சேதப்படுத்தியதால் ரூ.2 லட்சம் கேட்டு கல்லூரி மாணவர்கள் கடத்தல் - 5 பேர் கைது
x

வாடகைக்கு எடுத்துச்சென்ற காரை சேதப்படுத்தியதால் ரூ.2 லட்சம் கேட்டு கல்லூரி மாணவர்களை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருபவர்கள் செயிப் அஷ்ரப் (வயது 21) மற்றும் ஆதித்யா (21). டெல்லி மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த இவர்கள் இருவரும், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்கள் இருவரும் திருவேற்காட்டை சேர்ந்த வெங்கடேசன்(39) என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்து சென்றனர். பூந்தமல்லி அருகே சென்றபோது கார் விபத்தில் சிக்கியது. இதில் கார் லேசான சேதம் அடைந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கல்லூரி மாணவர்கள் இருவரும் காருக்கான சேதாரத்துக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்து விடுவதாக கூறியதால் வழக்கு ஏதும் தேவையில்லை என்று இரு தரப்பினரும் பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வெங்கடேசன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கல்லூரி விடுதிக்கு சென்று மாணவர்கள் இருவரையும் வெளியே வரவழைத்து, சேதமடைந்த தனது காருக்கு கூடுதலாக பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் திடீரென கல்லூரி மாணவர்கள் செயிப் அஷ்ரப், ஆதித்யா இருவரையும் தாங்கள் வந்த காரில் கடத்திச்சென்றனர். பூந்தமல்லி அருகே உள்ள ஒரு அறையில் தங்க வைத்து இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் மாணவர்களின் உறவினர்களை தொடர்பு கொண்டு ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் இருவரையும் உயிருடன் விடுவோம் என்று மிரட்டினா்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் உறவினர்கள், கல்லூரி மாணவர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக ராமாபுரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா ஆகியோர் தலைமையிலான போலீசார், கடத்தல் ஆசாமிகள் பேசிய செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தனர்.

அதில் அவர்கள் பூந்தமல்லி அடுத்த நூம்பல் பகுதியில் மாணவர்களை கடத்தி வைத்து இருப்பது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கடத்தப்பட்ட மாணவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்களான சந்தோஷ்குமார் (26), வக்கீல் தினேஷ்குமார் (30), பார்த்திபன் (27), சரத் (22) ஆகிய 5 பேரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story