கீழ்குந்தா ஹெத்தையம்மன் கோவில் திருவிழா நிறுத்தம்
மஞ்சூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் கீழ்குந்தா ஹெத்தையம்மன் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
மஞ்சூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் கீழ்குந்தா ஹெத்தையம்மன் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பினர் பிரச்சினை
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கீழ்குந்தாவில் காடெஹெத்தையம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் 'தெவ்வஹப்பா' என்று அழைக்கப்படும் அறுவடை பண்டிகை நடைபெற்று வருகிறது. இதில் குந்தை சீமைக்கு உட்பட்ட 14 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக கோவில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் திருவிழா நடத்துவது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 21-ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் கோவில் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. ஒரு தரப்பினர் மேளதாளத்துடன் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்றதாகவும், மற்றொரு தரப்பினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
திருவிழா நிறுத்தம்
ஊட்டி ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு ஞானரவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து ஒரு தரப்பினர் ஊட்டி தமிழகம் மாளிகை சென்று அமைச்சர் கா.ராமச்சந்திரனை சந்தித்து திருவிழா நடத்த அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரிடமும் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைராஜ், குந்தா தாசில்தார் இந்திரா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சங்கீதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், நேற்று அதிகாலை வரை திருவிழா நடத்துவதில் உடன்பாடு ஏற்படாததால், ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் திருவிழாவை நடத்த முடியவில்லை என கோவில் தக்கார் ராஜேஷ் அறிவித்தார். இதனால் கோவில் கதவு மூடப்பட்டு திருவிழா நிறுத்தப்பட்டது.
பக்தர்கள் ஏமாற்றம்
இதற்கிடையே பதற்றம் நிலவுவதால், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவிழா நின்றதால் நேர்த்திக்கடன் நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.