விழுப்புரம் அருகே வட்டிக்கு கடன் தராததால் தலைமை ஆசிரியர் தம்பதியை கொன்றேன்-கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


விழுப்புரம் அருகே வட்டிக்கு கடன் தராததால் தலைமை ஆசிரியர் தம்பதியை கொன்றேன்-கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:45 PM GMT)

விழுப்புரம் அருகே வட்டிக்கு கடன் தராததால் தலைமை ஆசிரியர் தம்பதியை கொன்றேன் என்று வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விழுப்புரம்

இரட்டை கொலை

விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் கே.எம்.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 68), இவருடைய மனைவி உமாதேவி (61). இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் இருவரும் வளவனூரில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 19-ந்தேதி மாலை ராஜன் மற்றும் அவரது மனைவி உமாதேவியும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்களது வீட்டில் இருந்த பீரோக்கள் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. உமாதேவி அணிந்திருந்த 4¼ பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.

இச்சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

புதுச்சேரியில் வாலிபர் சிக்கினார்

மேலும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தம்பதியினரை கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புலன் விசாரணை மேற்கொண்டதில் வளவனூர் டி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் புருஷோத்தமன் (25) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், புருஷோத்தமனை மடக்கிப்பிடித்து, விழுப்புரம் அழைத்து வந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ராஜன், உமாதேவி ஆகிய இருவரையும் கொலை செய்து நகையை கொள்ளையடித்ததை புருஷோத்தமன் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

ராஜன், தலைமை ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், தான் சம்பாதித்த பணம் மற்றும் ஓய்வூதிய தொகையாக வந்த பணத்தில் இருந்து தனக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். அவர் தனக்கு தெரிந்தவர்களை மட்டுமே வீட்டிற்குள் அனுமதித்து வந்துள்ளார்.

கடன் தர மறுப்பு

இந்த சூழலில் பக்கத்து வீட்டை சேர்ந்தவரும், சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தவருமான புருஷோத்தமன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜனிடம் சென்று ரூ.1 லட்சம் கடனாக கேட்டுள்ளார். அதற்கு ராஜன், பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ராஜன் மீது புருஷோத்தமனுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புருஷோத்தமன், ராஜனை கொலை செய்ய திட்டம் தீட்டினார். சம்பவத்தன்று ராஜன் வீட்டிற்கு புருஷோத்தமன் சென்றுள்ளார். அங்கு ஒரு அறையில் உமாதேவி படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். மற்றொரு அறையில் இருந்த ராஜனிடம் மீண்டும் கடன் தரும்படி கேட்டு பிரச்சினை செய்துள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

அதற்கு புருஷோத்தமனை ராஜன் தகாத வார்த்தையால் திட்டினார். இதில் ஆத்திரமடைந்த புருஷோத்தமன், ராஜனை கையால் தாக்கியதோடு பெட்ஷீட் துணியை தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி அந்த துணியால் ராஜனின் கழுத்தை நெரித்துக்கொன்றார்.

பின்னர் வீட்டில் இருந்த 2 பீரோவையும் கள்ளச்சாவி மூலம் திறந்து அதில் பணம் ஏதும் இருக்கிறதா என்று தேடிப்பார்த்துள்ளார். ஆனால் நகை, பணம் ஏதும் கிடைக்கவில்லை.

இதனிடையே மற்றொரு அறையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த உமாதேவி, சத்தம் கேட்டு அறையின் கதவை திறந்து வெளியே வந்து கூச்சலிட்டபோது, அவரையும் தாக்கி துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்ததுடன், ராஜன், உமாதேவி ஆகியோரின் செல்போன்களையும் எடுத்துக்கொண்டு தப்பி சென்றது தெரிந்தது.

மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story