முதியவரை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை


முதியவரை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 23 Aug 2023 1:30 AM IST (Updated: 23 Aug 2023 3:27 PM IST)
t-max-icont-min-icon

சிறுமுகை அருகே முதியவரை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கோயம்புத்தூர்
கோவை

சிறுமுகை அருகே முதியவரை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கூலித்தொழிலாளி

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சின்னக்கள்ளிப்பட்டி ஏ.டி.காலனியை சேர்ந்தவர் மாகாளி (வயது 60). இவருடைய மகன் சிவராஜ் (43). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

மாகாளியின் மனைவி இறந்துவிட்டதால் அவர், தனது மகனுடன் வசித்து வந்தார். மாகாளிக்கும், சிவராஜிக்கும் குடிப்பழக்கம் இருந்தது. இதனால் 2 பேரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

தகராறு

இந்த நிலையில் கடந்த 16.10.2019 அன்று மாலையில் மாகாளி, சிவராஜின் மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியதால் தகராறு செய்து விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர், இறைச்சி வாங்கி வந்து சிவராஜின் மனைவியிடம் கொடுத்து சமைத்து தருமாறு கூறி உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் தகராறு செய்து உள்ளார்.

இது பற்றி சிவராஜிடம், அவருடைய மனைவி கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து சிவராஜூம், மாகாளியும் சேர்ந்து மது குடித்தனர். அப்போது தனது மனைவியிடம் தகராறு செய்தது குறித்து தந்தை மாகாளியிடம் சிவராஜ் கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

வீட்டுக்குள் புதைக்க முயற்சி

இதில் ஆத்திரம் அடைந்த சிவராஜ் இரவு 10 மணியளவில் மாகாளியை வீட்டிற்குள் அழைத்துச்சென்று டி.வி. சத்தத்தை அதிகப்படுத்தி விட்டு தோசை திருப்பும் கரண்டியால் சரமாரியாக தாக்கி கொலை செய்தார். பின்னர் அவருடைய உடலை வீட்டிற்குள் குழிதோண்டி புதைக்க முயன்று உள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் சிறுமுகை போலீசார் கொலை, தடயங்களை அழிக்க முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.சசிரேகா, தந்தையை கொலை செய்த குற்றத்துக்காக சிவராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தடையங்களை அழிக்க முயன்றதற்கு ஒரு ஆண்டு சிறையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கே.கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.


Next Story