2 நாய்களை கொன்று சந்தன மரம் வெட்டி கடத்தல்
கோவை செல்வபுரத்தில் நள்ளிரவில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த 2 நாய்களை கொன்று விட்டு சந்தன மரத்தை வெட்டி சென்றனர்.
கோவை
கோவை செல்வபுரத்தில் நள்ளிரவில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த 2 நாய்களை கொன்று விட்டு சந்தன மரத்தை வெட்டி சென்றனர்.
நாய்கள் கொலை
கோவை ஆர்.எஸ்.புரம் பூசாரிபாளையம் பகுதியில் மில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஏராளமான பாக்கு மரங்கள் உள்ளன. இங்கு துரை (வயது 45) என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து தோட்டத்தை பராமரித்து வருகிறார். தோட்டத்தின் காவலுக்காக 3 நாட்டு நாய்களும் வளர்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் தோட்டத்தில் 2 நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த துரை உடனடியாக தோட்ட உரிமையாளருக்கு சொந்தமான மில்லில் பணிபுரியும் செந்தில்குமார் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
சந்தன மரம் வெட்டி கடத்தல்
இதனை தொடர்ந்து அங்கு வந்த செந்தில்குமார் தோட்டத்தை சுற்றி பார்த்தார். அப்போது தோட்டத்தில் இருந்த சந்தன மரத்தை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தன்று நள்ளிரவில் தோட்டத்திற்குள் இருந்த சந்தன மரத்தை வெட்டுவதற்காக மர்ம கும்பல் புகுந்தது. அங்கு நாய்களை கண்டதும், அதிர்ச்சி அடைந்த அந்த கும்பல் உடனடியாக நாய்களுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்து விட்டு மரத்தை வெட்டி கடத்தியது தெரியவந்தது.