மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா


மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா
x

புதுக்கோட்டையில், மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா நடைபெற்றது. மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

மன்னர் நூற்றாண்டு விழா

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னர் பரம்பரையில், 9-வது மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள் தாஸ் ராஜகோபால தொண்டைமான் ஆவார். இவர், கடந்த 23-6-1922-ல் பிறந்தார். இவரது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். இந்நிலையில் மன்னரின் நூறாவது பிறந்தநாளை நூற்றாண்டு விழாவாக கொண்டாட அவரது குடும்பத்தினரும், சமூக ஆர்வலர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மன்னரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் ராஜகோபால தொண்டைமான், இவரது மனைவியும், முன்னாள் திருச்சி மாநகராட்சி மேயருமான சாருபாலா தொண்டைமான், ராஜ்குமாரி ஜானகி மனோகரி ராஜாயி, யுவராஜ் பிரிதிவிராஜ் தொண்டைமான், ராஜ்குமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நினைவு மணிமண்டபம்

அதன்பின் அமைச்சர் ரகுபதி கூறுகையில், புதுக்கோட்டை நகரில் ராஜகோபால தொண்டைமான் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில், அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

மன்னர் தனது பதவிக்காலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனிற்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். கருணாநிதி புதுக்கோட்டையை 1974-ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். மேலும் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க. மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைத்திட ராஜகோபால தொண்டைமான் தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசிற்கு வழங்கினார்.

மன்னர் ராஜகோபால தொண்டைமானின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட பொது மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் மன்னரின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும் என்றார்.

அன்னதானம்

அதன்பின் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாமன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் சிலைக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைதொடர்ந்து சமஸ்கிருத ஓரியண்டல் பள்ளி, பழைய பஸ் நிலையம், கே.கே.சி. மகளிர் கல்லூரி, சின்னப்பா பூங்கா, பிருந்தாவனம், மாத்தூர் வள்ளலார் மாணவர் இல்லம், காது கேளாதோர் பள்ளி, விழி இழந்தோர் பள்ளி, தர்மா முதியோர் இல்லம் ஆகிய இடங்களில் ராஜகோபால தொண்டைமான் குடும்பத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தங்கத்தேர் இழுக்கப்பட்டது

அதை தொடர்ந்து மாலை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் மாலை 6 மணிக்கு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் தங்க தேர் இழுக்கப்பட்டது. தங்கத்தேரை ராஜகோபால தொண்டைமான் மற்றும் அவரது மனைவி சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் வடம் பிடித்து இழுத்தனர்.

அதைதொடர்ந்து புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மன்னரின் திருஉருவப்படத்தை அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் வைத்து நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. நாதஸ்வரம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் உள்பட கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் நகர்மன்றத்தை வந்தடைந்தது.

நூற்றாண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண் சின்னப்பா, உபையதுல்லா, புவனேஸ்வரி தங்கமாளிகை உரிமையாளர் சோம.நடராஜன், எஸ்.பி.முருகப்பன், மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா குழு செயலாளர் சம்பத்குமார், முன்னாள் தக்கார் வைரவன், வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டை முன்னாள் அரசு வக்கீல் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் மன்னர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story