கிஷோர் கே.சாமி மீண்டும் கைது
கோவை கார் வெடிப்பு தொடர்பாக அவதூறு பரப்பிய கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்தவர் கிஷோர் கே.சாமி. இவர் கடந்த மாதம் 23-ந் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கிஷோர் கே.சாமி மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்தநிலையில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக அவதூறு பரப்பியதாக மற்றொரு புகாரின் பேரில், கடந்த வாரம் சென்னையில் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டார். இதனை அறிந்த கோவை போலீசார் கோர்ட்டு உத்தரவு பெற்று அவரை கோவை 4-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி சரவணபாபு முன்பாக நேற்று ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து கோவை வழக்கில் வருகிற 12-ந் தேதி வரை கிஷோர் கே.சாமிக்கு கோர்ட்டு காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கிஷோர் கே.சாமியை மாநகர குற்றப்பிரிவு போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மனு அளித்தனர். இதில் 10 மணி நேரம் மட்டும் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கிஷோர் கே.சாமியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.