ஆடி திருவிழாவையொட்டி கருப்பர் கோவில்களில் கிடாய் வெட்டும் நிகழ்ச்சி


ஆடி திருவிழாவையொட்டி கருப்பர் கோவில்களில் கிடாய் வெட்டும் நிகழ்ச்சி
x

ஆடி திருவிழாவையொட்டி கருப்பர் கோவில்களில் கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

மதகடிக்கருப்பர் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற மதகடிக்கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு கிடாய் வெட்டும் நிகழ்ச்சி 33 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

இதையொட்டி கிராமத்தில் உள்ள அனைத்து இனமக்களும் ஒன்றுகூடி தெருவாசல் கூடம் முன்பாக கிடாய் வெட்டினர். பின்னர் பெண்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்தனர். அதனைத்தொடர்ந்து கதலிவனேஸ்வரர் கோவிலில் இருந்து தெருவாசல் கூடம் வரை பக்தர்கள் அரிவாள்களை பிடிக்க மதகடிக்கருப்பர் சாமியாடி அரிவாள் மீது ஏறி நடந்து சென்றார். இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

கிடாய்வெட்டு பூஜை

மேட்டுப்பட்டி அருகே உள்ள சேங்கை தோப்பு சோனை கருப்பர் கோவிலில் ஆடி மாத கிடாய்வெட்டு பூஜையையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பொங்கல் வைத்து சோனை கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு படையலிட்டனர். நள்ளிரவு பூசாரிகளுக்கு சாமி அழைக்கப்பட்டு கிடாய் வெட்டி படையல் செய்து பூஜை போடப்பட்டது. பக்தர்களுக்கு சாமியாடி குறி கூறினார். இதேபோல் பூவரசகுடி செந்தரை கருப்பர் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு கிடாய் வெட்டி பூஜை போடப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு கிராமிய நிகழ்ச்சி நடைபெற்றது. பூவரசகுடி செல்வ விநாயகர் கோவிலில் சந்தன காப்பு விழா நடைபெற்றது.

அரிமளம் ஒன்றியம் துறையூர் ஊராட்சி கீரணிப்பட்டி கிராமத்தில் உள்ள மடைக்கருப்பர் சுவாமிக்கு கிடாய் வெட்டு பூஜை நடத்தினால் மழை நன்றாக பெய்து கிராமம் வளர்ச்சி அடையும், தொழில் சிறக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும். இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு 15 கிடாக்கள் மடைக்கருப்ப சுவாமி முன்பு வெட்டப்பட்டது. இதையடுத்து, சுவாமிக்கு படையலிட்டு அதிகாலை 5.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குத்துவிளக்கு பூஜை

விராலிமலை தாலுகா, பேராம்பூரில் உள்ள முத்து மாரியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பேராம்பூர், சாத்திவையல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 150 பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு பூஜை செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இலுப்பூர் அருகே நெய்வாய்ப்பட்டி பிடாரியம்மன்கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 501 பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் நடந்தது.

பூச்சொரிதல் விழா

மணமேல்குடி தெற்கூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி அய்யனார் கோவிலிருந்து பெண்கள் தலையில் பூத்தட்டு சுமந்து கிழக்கு கடற்கரை சாலை சந்தைபேட்டைவீதி செங்குந்தர் புரம் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். அதனைதொடர்ந்து அம்மனுக்கு காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நடந்தது. வருகிற 16-ந் தேதி காவடி, பால்குடம் ஊர்வலம் நடைபெறுகிறது.


Next Story