கீழவேகுப்பட்டி, வேங்கிடக்குளத்தில் மஞ்சுவிரட்டு; 12 பேர் காயம்


கீழவேகுப்பட்டி, வேங்கிடக்குளத்தில் மஞ்சுவிரட்டு; 12 பேர் காயம்
x

கீழவேகுப்பட்டி, வேங்கிடக்குளத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 12 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

மஞ்சுவிரட்டு

பொன்னமராவதி அருகே கீழவேகுப்பட்டி கிராமத்தில் ஏகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. கீழவேகுப்பட்டியில் கோவிலில் வழிபாடு செய்த பின்னர் ஊர் முக்கியஸ்தர்களால் ஜவுளி எடுத்து வரப்பட்ட பின்னர் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

இதனை இளைஞர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகளை வீரர்களிடம் பிடிபடாமல் பாய்ந்து சென்றது. மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய 6 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதில் கீழவேகுப்பட்டி, காட்டுப்பட்டி, பி.உசிலம்பட்டி உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

வேங்கிடக்குளம்

ஆலங்குடி அருகே வேங்கிடக்குளம் புனித அடைக்கல அன்னை ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. வடமாடு மஞ்சுவிரட்டில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி, மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள் வந்திருந்தன. மொத்தம் 11 காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

6 பேர் காயம்

இதில் சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் பாய்ந்து சென்றது. காளைகள் முட்டியதில் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவகுழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

மஞ்சுவிரட்டிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள், இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story