மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்றவேண்டும்


மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்றவேண்டும்
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாலி ஏரியில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரை செடிகள் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவாலி ஏரியில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரை செடிகள் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாலி ஏரி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் திருவாலி, காரைமேடு, கீழ சட்டநாதபுரம், நெம்மேலி, நெப்பத்தூர், திருநகரி, புதுத்துறை, வேத ராஜபுரம், கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 3000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மழை காலங்களில் வெள்ள நீர் வடிகாலாகவும் இந்த ஏரி இருந்து வருகிறது.

கடற்கரை கிராமங்களுக்கு ஏரி பகுதியிலிருந்து மோட்டர்கள் மூலம் பைப் லைன் அமைத்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கடலோர மீனவ கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திருவாலி ஏரியில் கடந்த மாதம் வந்த நீர் ஏரி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. குறைந்த அளவே நீர் காணப்பட்டாலும், அந்த நீர் முழுவதும் மாசு படிந்து காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி நீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்

மேலும் நூற்றுக்கணக்கான ஆடு மாடுகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருவாலி ஏரி நீர் மாசடைந்து காணப்படுவதால், ஆடு, மாடுகளை தண்ணீர் காட்டுவதற்கு அதனுடைய உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே இருக்கக்கூடிய இரண்டு ஏரிகளில் ஒன்றாக திருவாலி ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து காணப்படுகிறது. தற்போது ஏரியை முழுமையாக தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது வேதனை அளிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஆகாயத்தாமரை மண்டிக்கிடப்பதால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story