கிருஷ்ணகிரியில் தொழிலாளிக்கு கத்திக்குத்து-ரவுடி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தம்மண்ண நகரை சேர்ந்தவர் நிதீஷ்குமார் (வயது 25). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ராயக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த 3 பேர் நிதீஷ்குமாரை வழிமறித்து, மது குடிப்பதற்காக பணம் கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் நிதீஷ்குமாரை கத்தியால் குத்தினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த நிதீஷ்குமார் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் விசாரணை நடத்தினார். அதில் நிதீஷ்குமாரிடம் பணம் கேட்டு கத்தியால் குத்தியது கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ரவுடி குல்பி என்கிற மணிமாறன் (23) மற்றும் 2 பேர் என தெரிய வந்தது. ரவுடி குல்பி மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. கத்திக்குத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குல்பி மற்றும் அவருடன் வந்த 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.