இரவு நேரத்தில் மகப்பேறு டாக்டரை நியமிக்க வேண்டும்


இரவு நேரத்தில் மகப்பேறு டாக்டரை நியமிக்க வேண்டும்
x

ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மகப்பேறு உள்ளிட்ட டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கூறினார்.

மயிலாடுதுறை

பொறையாறு;

ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மகப்பேறு உள்ளிட்ட டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கூறினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் (தி.மு.க) தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினர். இதன் விவரம் வருமாறு:-ரஜினி (வி.சி.க):- செம்பனார்கோவிலில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். சேமங்கலம், எருமல், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகப்பேறு மருத்துவர்

மோகன்தாஸ் (தி.மு.க):- செம்பனார்கோவிலில் கலைஞர் சிலை மற்றும் அவரது பெயரில் நூலகம் அமைக்க வேண்டும். கிடாரங்கொண்டான் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிற்கு செல்லும் சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும். பொதுமக்கள் அவசர சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மகப்பேறு மருத்துவர் உள்ளிட்ட டாக்டர்களை நியமிக்க வேண்டும்.ஷகிலாஅஜீஸ் (தி.மு.க.):- சங்கரன்பந்தல் கடைவீதியில் வீரசோழன் ஆறு அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மீன் மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றி மீன் விற்பனை செய்ய கான்கிரீட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவிகா(தி.மு.க.):- புத்தகரத்தில் மயான சாலை மற்றும் தார்ச்சாலை அமைத்து, அங்கு சேதமடைந்த பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டும்.

பகுதிநேர அங்காடி

முத்துலட்சுமி (அ.தி.மு.க.):- ஆறுபாதி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக பகுதிநேர அங்காடி அமைக்க அனுமதி பெறப்பட்ட நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.செல்வம் (தி.மு.க.):- சந்திரபாடி ஊராட்சியில் பழுதடைந்த துணை சுகாதார நிலைய கட்டிடத்தை புதிதாக கட்டித்தர வேண்டும்.சின்னூர்பேட்டை கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.கிருபாவதி (தி.மு.க.):- கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி பயணிகள் நிழலகம் அருகில் சிமெண்டு சாலையில் தண்ணீர் தேங்காத வகையில் சீரமைக்க வேண்டும்.

நடவடிக்கை

ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் (தி.மு.க.):- தற்போது உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கூட்டத்தில் செம்பனார்கோவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story