பட்டா விவரங்கள் அறிய `தமிழ்நிலம்' செயலி அறிமுகம்


பட்டா விவரங்கள் அறிய `தமிழ்நிலம் செயலி அறிமுகம்
x

பட்டா விவரங்கள் அறிய `தமிழ்நிலம்' செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

தமிழ்நாடு நில அளவை மற்றும் நில வரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்துடன் `தமிழ் நிலம்' என்ற கைப்பேசி செயலி மற்றும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளமும் இணைக்கப்பட்டுள்ளது. உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்), தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியவும், ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்க பட்டியல் விவரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவற்றை இந்த இணையதளம் மூலம் அறியலாம். எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இணையதளம் மற்றும் `தமிழ்நிலம்' செயலி மூலம் நில அளவை தொடர்பான விவரங்களை பார்வையிட்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story