கொடைக்கானலில் கோடைவிழா, மலர் கண்காட்சி - சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்


தினத்தந்தி 24 May 2022 11:17 AM GMT (Updated: 2022-05-24T16:48:20+05:30)

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா, மலர் கண்காட்சி இன்று தொடங்கியது ,சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

திண்டுக்கல்

மலர் கண்காட்சி

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்கியது. இந்த கண்காட்சி 6 நாட்கள் நடக்கிறது. கோடை விழா அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. கோடை விழாவை அமைச்சர்கள் இ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, எம்.மதிவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இதையொட்டி பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர், வெள்ளைப்பூண்டு,ஸ்பைடர் மேன்,சிங் சான் பொம்மை ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அவர்றை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். மேலும்,காய்கறி மற்றும் பழங்களால் ஆன தமிழன்னை சிலை,மற்றும் மலர்களால் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை பொதுமக்கள் பார்வையிட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மலைப்பகுதியில் பழுதடையும் வாகனங்களை அகற்றுவதற்காக மீட்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பழுதாகும் வாகனங்களை சீரமைப்பதற்காக தனி குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசாருடன் இணைந்து பணிபுரிய தனியார் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழாவையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து குவிந்துள்ளனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோடைவிழா நடைபெறுவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


Next Story