கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட்டது. இதில் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சீல் வைக்கப்பட்ட விசாரணை ஆவணங்களை நீலகிரி மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் நேற்று ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. சயான், மனோஜ் ஆகிய 2 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி முருகவேல், அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி முருகனிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அமைத்த தனிப்படை, நடைபெற்று வரும் விசாரணை குறித்து தெரிவிக்கப்பட்டது.

மேலும் வழக்கில் தொடர்புடையவர்களின் செல்போன் உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story