கோடநாடு வழக்கு: சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சம்மன்..!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சசிகலா உள்பட இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் 1,500 பக்கம் கொண்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதேபோல் மற்றொரு நகல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிஐ எஸ்.பி. முரளி ரம்பாவுக்கு சிறப்பு புலனாய்வுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு முன் விசாரணைக்காக முரளி ரம்பா ஆஜராவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2017-ல் கோடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது நீலகிரி மாவட்ட எஸ்.பியாக இருந்தவர் முரளி ரம்பா. தற்போது அவர், சிபிஐ-யில் பணிபுரிவதால் அவருக்கான சம்மனை சிபிஐ தலைமைச் செயலகத்துக்கு சிறப்பு புலனாய்வுத்துறை அனுப்பியுள்ளது.