கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை தொழிலதிபர் செந்தில்குமார் நேரில் ஆஜராகும்படி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன்படி கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில், தொழிலதிபர் செந்தில்குமார் இன்று (ஜூலை 7-ம் தேதி) நேரில் ஆஜாரானார். அவரிடம் கோடநாடு எஸ்டேட்டில் மாயமான ஆவணங்கள், அவரது வீட்டில் கண்டறியப்பட்டது எப்படி என்பது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சில மணி நேரங்கள் தொடர்ந்தன