கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக விசாரணை


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:  முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக விசாரணை
x

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக விசாரணை நடைபெற்றது.

கோயம்புத்தூர்


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் 3-வது முறையாக விசாரணை நடைபெற்றது.

கோடநாடு வழக்கு

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017- ஆண்டு ஏப்ரல் மாதம் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை அள்ளிச்சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த வழக்கில் மறு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள், சாட்சிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது. கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவருடைய மகன் செந்தில்குமார், உதவியாளர் பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. புதுச்சேரி சொகுசு பங்களா உரிமையாளர் நவீன் பாலாஜி என்பவரிடமும் கோவையில் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.

ஏற்கனவே சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றபோது கோடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதால் அது எப்படி? இங்கு வந்தது என்ற அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.

3-வது முறையாக விசாரணை

இந்த நிலையில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரிக்க அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி ஆறுக்குட்டி போலீசார் முன்பு ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை பெற்றனர். ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் டிரைவராக வேலை பார்த்தவர். கோடநாடு கொலை, கொள்ளை நடந்த சில நாட்களில் கனகராஜ் விபத்தில் சிக்கி இறந்தார். கனகராஜ் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

3-வது முறையாக 3 மணிநேர விசாரணைக்குப் பின் வெளியே வந்த ஆறுக்குட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

கனகராஜ் 2 ஆண்டுகள் என்னிடம் டிரைவராக இருந்ததால் அவர் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. கடந்த முறை விசாரணையின்போது விடுபட்ட சில கேள்விகளை கேட்டனர். அதற்கு பதில் அளித்தேன். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பு அளிப்பதாக காவல்துறையிடம் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடகம் நடக்கிறது

மேலும் அவர் கூறும்போது, அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பதை மக்களிடமும், தொண்டர்களிடமும்தான் கேட்கவேண்டும். அ.தி.மு.க.வில் தற்போது நாடகம் நடந்துகொண்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.


Next Story