கோடங்குடி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
கோடங்குடி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதற்கு முன் கடந்த 2009-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. அதன் பிறகு கோவில் திருப்பணிகள் செய்வதாக முடிவு செய்யப்பட்டு பாலாலயம் நடைபெற்றது. இதனால் கோவில் திருவிழா எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கோவில் தீமிதி திருவிழா நடத்துவது என்று கிராம நாட்டாமைகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 5-ந் தேதி திருவிழாவுக்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் அம்மன் வீதி உலா காட்சி கிராமத்தின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி தீ மிதிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முதலில் பூங்கரகம், அக்னி கரகம், குண்டம் இறங்கிய பின்பு மற்ற பக்தர்கள் தீ மிதித்தனர்.தொடர்ந்து 14 ஆண்டுகள் திருவிழா நடைபெறாததால் நேற்று நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 200-க்கும் அதிகமான பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர். தீ மிதித்த பக்தர்களில் சிலர் தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தீமிதித்த காட்சி பக்தர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. நீண்ட காலமாக திருவிழா நடைபெறாததால் நேற்று கோடங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதி திருவிழாவை கண்டு சரண கோஷங்களை எழுப்பினர். அதிக அளவு பக்தர்கள் கூடியதால் தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.