தண்ணீர் குட்டையாக காட்சிஅளிக்கும் கொளப்பள்ளி சாலை


தண்ணீர் குட்டையாக காட்சிஅளிக்கும் கொளப்பள்ளி சாலை
x
தினத்தந்தி 17 Jun 2023 12:45 AM IST (Updated: 17 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி-கொளப்பள்ளி இடையே குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

அய்யன்கொல்லி-கொளப்பள்ளி இடையே குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வாகன ஓட்டிகள் அவதி

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் இருந்து முருக்கம்பாடி, மழவன் சேரம்பாடி, கொளப்பள்ளி, எலியாஸ் கடை வழியாக பந்தலூர், கூடலூருக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக அரசு பஸ்கள் அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு, கொளப்பள்ளி, பந்தலூர், கூடலூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ்கள், பிற வாகனங்களும் சென்று வருகின்றன.

இதற்கிடையே மூலைக்கடை முதல் கோட்டப்பாடி, மழவன் சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால், அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் குழி இருப்பது தெரியாமல் வாகனங்கள் குழிக்குள் சிக்கி விடுகின்றன. மேலும் அரசு பஸ்களும் குழிகளில் சிக்கி அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள், நோயாளிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், நடந்து செல்லும் பொதுமக்கள் மீது வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து செல்கின்றன. சாலையின் இருபுறமும் புதர்கள் சூழ்ந்து காடுகள் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வனவிலங்குகள் நின்றால் கூட அவை தெரியாத அளவுக்கு காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அய்யன்கொல்லி-கொளப்பள்ளி இடையே உள்ள நெடுஞ்சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்கள் பழுதடைந்து நிற்பதால் பல மணி நேரம் நடுக்காட்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் குழிகள் அதிகரித்து வருவதால், பல்லாங்குழி சாலையாக மாறி வருகிறது. இதனால் வாகனங்கள் பழுதடைந்து நின்றால், காட்டு யானையிடம் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story