நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
50 சதவீத மானியத்துடன் நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
நாட்டுக்கோழிப்பண்ணை
திருப்பூர் மாவட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் அதாவது ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 625 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை அமைக்க தேவையான கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றுக்கான மொத்த செலவில் 50 சதவீதம் மாநில அரசால் வழங்கப்படும்.
மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையில் 4 வார வயதுடைய நாட்டுக்கோழிக்குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும். கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அந்த பகுதி மனித குடியிருப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
முன்னுரிமை
விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் ஆதார் அட்டை நகல், பண்ணை அமைய உள்ள இடத்துக்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீத தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 வருடத்துக்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23-ம் ஆண்டுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்ற சான்றிதழ் ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும்.
தகுதியானவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
----