கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு


கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
x

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு நிவாரண முகாமில் கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். முகாமில் தங்கி இருந்த ஒரு கர்ப்பிணிக்கு முகாமிலேயே வளைகாப்பு நடத்தப்பட்டது.

டெல்டாவின் வடிகால்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகள் செல்கின்றன. இந்த ஆறுகள் மூலமாக விவசாய பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கிறது. கர்நாடகத்தில் கனமழை கொட்டித்தீர்த்து அங்கு உள்ள அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே டெல்டா பகுதி ஆறுகளில் தண்ணீர் வரத்து இருக்கும்.கொள்ளிடம் ஆறு டெல்டா மாவட்டங்களின் முக்கிய வடிகால் ஆறாகும். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கொள்ளிடத்தில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் முழுவதும் கடலுக்கு நேரடியாக செல்கிறது.

2½ லட்சம் கன அடி தண்ணீர்

தற்போது கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. கர்நாடகத்தில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பதால் கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடத்தில் 2½ லட்சம் கன அடி தண்ணீர் சென்றது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் ஆற்றுக்குள் உள்ள படுகை கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டன. அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி அரசின் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தனர்.

மீண்டும் வெள்ளப்பெருக்கு

கடந்த 2 நாட்களாக தண்ணீர் வரத்து குறைந்து, கிராமங்களில் இருந்து தண்ணீர் வெளியேறி வந்த நிலையில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் நேற்று கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.இதனால் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஆற்றுப்படுகை கிராம மக்கள் மீண்டும் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

உணவு-குடிநீர்

நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகின் மூலமாகவும், ஆற்றில் இறங்கி நடந்தும் முகாம்களுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.இவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.

நிவாரண முகாமில் கர்ப்பிணிக்கு வளைகாப்பு

கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமமான நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த இளவரசன் என்பவர் மனைவி சிவரஞ்சனி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவர் நிவாரண முகாமில் தங்கி உள்ளார்.இந்த நிலையில் நேற்று அவருக்கு நிவாரண முகாமிலேயே வளைகாப்பு நடத்தப்பட்டது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்து இருக்கும் இந்த சூழலிலும் சிவரஞ்சனியின் வளைகாப்பை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் நடத்தினர்.



Next Story