கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு


கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
x

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது.

மயிலாடுதுறை

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி அதன் உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகிறது. அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைகிறது. அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைகிறது.கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. சமீப நாட்களாக தண்ணீரின் வரத்து குறைந்திருந்த நிலையில் நேற்று தண்ணீரின் வரத்து அதிகரித்தது.

தண்ணீர் சூழ்ந்தது

இதன் காரணமாக கொள்ளிடம் கரையோர கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. அங்குள்ள சாலையை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் தண்ணீரால் சூழப்பட்ட குடியிருப்புகளை பார்வையிட்டனர்.

உணவு

பின்னர், அங்குள்ளவர்களுக்கு அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள முகாமில் உணவு சமைத்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில நாட்களாக தண்ணீர் குறைந்திருந்த நிலையில் 4-வது முறையாக மீண்டும் தண்ணீர் அதிகரித்து வருவதால் கரையோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

இந்தநிலையில் தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் நேற்று கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகை, நாதல் படுகை, முதலைமேடு திட்டு, அளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடு பகுதியில் மணல்மேடு உருவாகியுள்ளது. இதனால், ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தண்ணீர் எளிதில் செல்லும் வகையில் ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திட்ட மதிப்பீடு

அளக்குடி, நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரைப்பகுதி தற்காலிகமாக பலப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி நிரந்தர தீர்வு காணப்படும் என்றார். அப்போது மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் உதவி பொறியாளர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story