கொல்லிமலை அடிவார பகுதியில் பாக்கு அறுவடை சீசன் தொடங்கியது விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்தது


கொல்லிமலை அடிவார பகுதியில்  பாக்கு அறுவடை சீசன் தொடங்கியது  விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்தது
x

கொல்லிமலை அடிவார பகுதியில் பாக்கு அறுவடை சீசன் தொடங்கியது விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்தது

நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலை அடிவார பகுதியில் பாக்கு அறுவடை சீசன் தொடங்கியது. பாக்கு விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்தது.

பாக்கு விவசாயம்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதியில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் பாக்கு விவசாயம் நடந்து வருகிறது. வெண்டாங்கி, ஆச்சாவடி, சின்னப்பள்ளம்பாறை, சின்ன காரவள்ளி, காரவள்ளி நடுக்கோம்பை பகுதிகளில் பாக்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அந்த பகுதிகளில் அறுவடை சீசன் தொடங்கி உள்ளது.

இந்த பகுதிகளில் அதிகளவில் நாட்டு ரக பாக்கு விளைந்து வருகிறது. மங்களா ரக பாக்கு வகைகள் குறைவான இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றை அறுவடை செய்து சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு பாக்குகளை பதப்படுத்தி பெயிண்டு தயாரிக்கவும், இதர வகை பாக்குகள் தயாரிக்கவும் கொண்டு செல்கின்றனர்.

தொடர் மழை

தற்போது பாக்கு சீசன் தொடங்கியதால் கொல்லிமலை அடிவார பகுதியில் இருந்து நாள்தோறும் ஒரு வாகனத்தில் சுமார் 4 டன் முதல் 5 டன் வரை கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு தினந்தோறும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பாக்குகள் அறுவடை செய்து கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் அறுவடை செய்த பாக்குகளின் தோல் நீக்கி விற்பனை செய்யும் போது கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தொடர் மழையின் காரணமாக அடிவார பகுதியில் பாக்கு மரங்களில் கூடுதலாக பாக்கு காய்கள் காய்த்துள்ளன.

விலை குறைந்தது

இதனால் விலை சற்று குறைந்தது என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். பாக்கு கன்று நட்டு வைத்து சுமார் 4 ஆண்டுகளில் காய்கள் கொத்து கொத்தாக காய்த்து விடும். அதன் பிறகு சுமார் 25 ஆண்டுகள் வரை அவற்றில் இருந்து பாக்கு அறுவடை செய்யலாம் என்று பாக்கு விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story