பழுதடைந்த சாலையை சீரமைக்ககோரிகொல்லிமலையில் மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்


பழுதடைந்த சாலையை சீரமைக்ககோரிகொல்லிமலையில் மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் சேலூர் நாடு ஊராட்சியில் உள்ள ஊர்முடிப்பட்டி கிராமத்தில் இருந்து வெள்ளக்கல் ஆறு கிராமத்திற்கு செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்த சாலை செம்மேடு வரை இணைப்பு சாலையாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஊர்முடிப்பட்டி மலைவாழ் மக்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தலைமையில் செம்மேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென அங்கேயே தங்கி சமைத்து சாப்பிடும் வகையில் பாத்திரங்கள், விறகு, பாய் படுக்கையினை கொண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் தங்கராஜ், ஒன்றிய தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் பேசினார். இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதை அறிந்த வாழவந்தி நாடு போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மலைவாழ் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story