பழனியில் கொலு பொம்மை விற்பனை அமோகம்


பழனியில் கொலு பொம்மை விற்பனை அமோகம்
x

பழனியில் கொலு பொம்மை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் மரம், இரும்பினால் ஆன ரேக்குகளில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள்.

இதையொட்டி பழனி நகரில் உள்ள கடைகளில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. குறிப்பாக பழனி அடிவாரத்தில் உள்ள கடைகளில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை பக்தர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து அடிவாரத்தை சேர்ந்த பொம்மை வியாபாரி நாகராஜ் கூறுகையில், நவராத்திரியை முன்னிட்டு தற்போது இருந்தே கொலு பொம்மை விற்பனை தொடங்கியுள்ளது. வெளியூர்களில் இருந்து பழனிக்கு வருகை தரும் பக்தர்களும் கொலு பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.

அனைத்து வகையான சாமி பொம்மைகள், வாத்தியம் வாசிக்கும் பொம்மைகள், திருமண நிகழ்ச்சி, கிருஷ்ணர் திருவிளையாடல் பொம்மைகள், போர் படை பொம்மைகள் என பல்வேறு வகையான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டில் ரூ.450-க்கு விற்கப்பட்ட ஒரு செட் பொம்மை தற்போது ரூ.600-ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஒரு செட் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன என்றார்.



Next Story