கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக வருடத்தில் 2 முறை (மார்ச் மற்றும் செப்டம்பர்) பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 100 சதவீத மானியத்தில் கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுபதி மலைவாழ் குடியிருப்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நேரில் ஆய்வு செய்த உடுமலை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் கூறியதாவது:-
அண்டை மாநிலமான கேரளாவில் 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கோமாரி நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு ஊசி செலுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து உடுமலை கோட்டத்தில் மாநில எல்லையில் உள்ள கோடந்தூர், தளிஞ்சி, ஈசல்தட்டு, குழிப்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 12 ஆயிரம் கால்நடைகளுக்கு நேற்று முன்தினம் முதல் கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நோயானது காற்றின் மூலம் எளிதில் பரவி கால்நடைகளுக்கு நோய் தொற்றை ஏற்படுத்துகிறது.
எனவே கோமாரி நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி குழுவினர் தங்களது பகுதியில் முகாம் நடத்தும் பொழுது 4 மாதத்திற்கு மேற்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை கோமாரி நோயில் இருந்து பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.