ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மனிதன் வாழ்ந்த இடம் கொங்கராயக்குறிச்சி - தொல்லியல் ஆர்வலர்கள் விளக்கம்


ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மனிதன் வாழ்ந்த இடம் கொங்கராயக்குறிச்சி - தொல்லியல் ஆர்வலர்கள் விளக்கம்
x
தினத்தந்தி 21 July 2022 10:00 PM IST (Updated: 21 July 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட நாகரிக மனிதன் வாழ்ந்த இடம் கொங்கராயக்குறிச்சி என்று தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஶ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக்கரையில் கொங்கராயக்குறிச்சி அமைந்துள்ளது. வரலாற்று பெருமை வாய்ந்த இவ்வூரில் முற்கால பாண்டியன் மாறன் சடையனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி பிள்ளையார் கோவில் மற்றும் மண்ணில் புதைந்து தற்போது சில வருடங்களுக்கு முன்பு வெளிப்பட்ட வீரபாண்டீஸ்வரர் கோவிலும் உள்ளது.

வீரபாண்டீஸ்வரர் கோவில் 11-ம் நூற்றாண்டில் ஜடவர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியனால் கட்டப்பட்டது. தென் சீர்காழி என்றழைக்கப்படும் இந்த கோவில் பைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். ஆனால், இந்த கோவில்கள் இரண்டும் மண்ணுக்குள் புதைந்தே காணப்படுகின்றது.

அதிலும் பழைய வெயிலுகந்தம்மன் மற்றும் மாலை அம்மன் கோவில்கள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்து கோவிலின் விமானங்கள் மட்டுமே வெளியே தெரியும்படி காட்சியளிக்கிறது.

வீரபாண்டீஸ்வரர் கோவிலை போன்று இவ்வூரில் மேலும் பல கோவில்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இந்த ஆலயங்களை வெளியே கொண்டு வர தமிழகம் மற்றும் மத்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில்,

பல கோவில்கள் மண்ணுக்குள் புதைந்து உள்ள கொங்கராயக்குறிச்சியின் வரலாறு 9-ம் நூற்றாண்டுடன் நிறைவு அடையவில்லை. உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் வரலாற்றுடன் இணைந்து முடிவுரை இல்லாத வரலாற்றில் பயணிக்க தொடங்கியுள்ளது.

இதற்கான சான்றுகளை 1899 முதல் 1905-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் ரியா தனது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளார். அதன்படி, தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஆதிச்சநல்லூருக்கு எதிரே அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்குமுற்பட்ட செங்கல் கட்டுமானம் ஒன்றை கண்டதாகவும், ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டில் புதைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடம் கொங்கராயக்குறிச்சியாக தான் இருந்திருக்க வேண்டும் என்றும் அலெக்சாண்டர் ரியா தெரிவித்துள்ளார்.

இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வூரின் பழம்பெயர் முதுகோனூர் என்பதை மண்ணுக்குள் புதைந்து காணப்படும் வலம்புரி பிள்ளையார் கோவில் 10-ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகின்றது. இந்த கொங்கராயகுறிச்சியில் இருந்த பூர்வகுடிகளே ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டில் புதையுண்டு உள்ளனர் என்பதை உணர்த்தும் விதமாக கொங்கராயக்குறிச்சி மக்களிடம் இன்று வரை வாய்மொழி கதைகள் வழக்கத்தில் உள்ளது.

மேலும், கொங்கராயக்குறிச்சி கிராமத்தின் காடு, திரடு போன்ற பல்வேறு பகுதிகளில் பானை ஓடுகள், தாழியின் சிதைந்த பாகங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இந்த பானை ஓடுகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதிகளில் கிடைத்த பொருட்களை ஒத்தே காணப்படுகின்றது.

இப்படி பல சான்றுகள் ஆதிச்சநல்லூர், கொங்கராயக்குறிச்சி வரலாற்று தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. ஆகையால், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைந்த முதுமக்களின் வாழ்விடங்களை கண்டறிய வேண்டும் என்றால் கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளும் மத்திய தொல்லியல் துறையினரும், தாமிரபரணி கரையில் உள்ள அகழாய்வு இடங்களை தேடி ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறையினரும் கொங்கரயாகுறிச்சியில் அகழாய்வு மேற்கொண்டு பழமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story