கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலைய 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து, அவற்றில் அடுத்தாண்டு மின் உற்பத்தி தொடங்கும் விதமாக பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமான பணிகளும் கடந்தாண்டு தொடங்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி 2-வது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிப்பொருட்கள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த அணு உலையில் இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் இந்த பணியை முழுவீச்சில் மேற்கொண்டனர்.
இப்பணிகள் நிறைவு பெற்றநிலையில் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலோடு நேற்று காலை 11.35 மணிக்கு 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. அங்கு தற்போது 270 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில் படிப்படியாக மின் உற்பத்தி அளவு அதிகரிக்கப்படும். பின்னர் அந்த உலையில், முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என்ற இலக்கை இன்னும் ஓரிரு நாட்களில் அடையும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.






