கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் அரவான் களப்பலிக்கு பின் திருநங்கைகள் விதவைக்கோலம் பூண்டனர்


கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் அரவான் களப்பலிக்கு பின் திருநங்கைகள் விதவைக்கோலம் பூண்டனர்
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:45 PM GMT)

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அரவான் களப்பலிக்கு பின் திருநங்கைகள் தாலி அறுத்து விதவைக்கோலம் பூண்டனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி கொடியேற்றம், சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து குவிந்தனர்.

இவர்கள் அனைவரும் தங்களை புதுமணப்பெண்கள்போல் அலங்கரித்து கோவிலின் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர். அதேபோல் வேண்டுதலின்பேரிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் தாலி கட்டிக்கொண்டனர்.

கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள், தாங்கள் அரவானுக்கு மனைவிகள் ஆகிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் இரவு முழுவதும் கூட்டம், கூட்டமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

அரவான் சிரசு

விழாவின் 16-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 4 மணியளவில் கோவிலில் உள்ள அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஊர்வலமாக அரவான் சிரசு எடுத்து வரப்பட்டது. அப்போது திருநங்கைகள் சுற்றி நின்று கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இதற்கிடையே கோவிலின் வடபுறத்தில் சகடையில் 30 அடி உயர கம்பம் நட்டு வைக்கோல்புரி சுற்றப்பட்டது. இது அரவான் திருவுருவம் அமைக்க அடிப்படை பணியாக அமைந்தது. பின்னர் கீரிமேட்டில் இருந்து மக்கள் பூஜை செய்து அரவான் புஜங்கள், மார்பு பதக்கம் எடுத்து வந்தனர். அதுபோல் சிவலியாங்குளம் கிராமத்தில் இருந்து அரசிலை, விண்குடையும், நத்தம் கிராமத்தில் இருந்து பாதம், கைகள், புஜங்களும், தொட்டி கிராமத்தில் இருந்து மார்பு புஜங்கள், கயிறு, கடையாணி ஆகியவையும் கொண்டு வரப்பட்டது. இவை அனைத்தும் வைக்கோல் புரி மீது பொருத்தி அரவான் திருவுருவம் அமைக்கப்பட்டது.

தேரோட்டம்

அதன் பின்னர் காலை 8 மணியளவில் தேரோட்டம் நடந்தது. இந்த தேரை உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் திருநாவலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.வி.முருகன், திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி இளங்கோவன், கூவாகம் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதலின்பேரில் தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். இந்த தேர், கோவிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்தபடி வந்தது. அப்போது விவசாயிகள், வேண்டுதலின்பேரில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் சாமி மீது வீசியும், தேர் செல்லும் வழிநெடுகிலும் கற்பூரம் ஏற்றி பயபக்தியுடன் வணங்கினார்கள்.

ஒப்பாரி வைத்த திருநங்கைகள்

பின்னர் தேர் அழிகளம் நோக்கி புறப்பட்டது. அப்போது புதுமணப்பெண்கள்போல் தங்களை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு கூத்தும், கும்மாளமுமாக இருந்த திருநங்கைகள், தேர் அழிகளம் புறப்பட்டவுடன் சோகமயமாய் உணர்ச்சி வசப்பட்டு ஒப்பாரி வைத்து கதறி அழுதுகொண்டே வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு தேரை பின்தொடர்ந்தனர்.

இந்த தேர் பகல் 12.30 மணியளவில் அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலடியை சென்றடைந்தது.

தாலி அறுத்து விதவைக்கோலம்

அதனை தொடர்ந்து அங்கு அரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருநங்கைகள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து நெற்றியில் இருந்த குங்கும பொட்டை கோவில் பூசாரிகள் அழித்தனர். பின்னர் திருநங்கைகள் கையிலிருந்த வளையல்களை பூசாரிகள் உடைத்ததோடு அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலியையும் அறுத்தெறிந்தனர். இதில் தங்கத்தாலிகளை அணிந்திருந்த திருநங்கைகள் சிலர், அந்த தாலிகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தும் வகையில் அதை கோவில் செயல் அலுவலரிடம் கொடுத்து உரிய ரசீதை பெற்றனர்.

இந்நிகழ்ச்சியின்போது திருநங்கைகள் அழுது புலம்பி ஒப்பாரி வைத்தனர். பின்னர் திருநங்கைகள், அங்கிருந்த விவசாய கிணறுகளுக்கு சென்று குளித்து வெள்ளைச்சேலை அணிந்து விதவைக்கோலம் பூண்டு சோகமயமாய் கூவாகத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்றனர்.

அரவான் உயிர்ப்பித்தல்

அதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் பலி சாதம் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு அரவான் உயிர்ப்பித்தல் என்ற ஐதீக நிகழ்ச்சி ஏரிக்கரை காளி கோவிலில் நடந்தது. அப்போது மீண்டும் பந்தலடிக்கு தேர் கொண்டு வரப்பட்டு அரவான் சிரசு மட்டும் பூ பந்தல் மேல் அலங்காரம் செய்யப்பட்டு நத்தம், தொட்டி, கூவாகம் ஆகிய கிராமங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் இறக்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) விடையாற்றி உற்சவமும், நாளை (வெள்ளிக்கிழமை) தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவுபெறுகிறது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூவாகம் கிராமத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதேபோல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தற்காலிகமாக குடிநீர் தொட்டிகளும், கழிவறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

விழாவையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story