கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி விஜய முருகன் விவசாயிகளுக்கு விதைகள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், எனவே விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் வத்திராயிருப்பு, மம்சாபுரத்தில் முழு தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திர ராஜா விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் கரும்பாலை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நடவடிக்கை
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசிய கலெக்டர், வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 182 கிராம பஞ்சாயத்துகளில் 148 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கான்சாபுரம், ராமசாமியாபுரம் நெல் கொள்முதல் நிலையங்கள் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டதில் 3 ஆயிரம் மூடைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 18 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்று தரும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ஊக்கத்தொகை
பாரத பிரதமரின் விவசாய ஊக்கத்தொகை பெறும் திட்டத்தில் அடுத்து நிதியினை பெறுவதற்கு விவசாயிகளின் ஆதார் அட்டை விவரங்கள் நில விவரங்களை பதிவு செய்யவும், பதிவுகளை புதுப்பிக்காதவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் புதுப்பித்திடவும் விவசாய கடன் அட்டை பெற விவசாயிகள் வட்டார வேளாண்மை அலுவலகம் மற்றும் தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் விண்ணப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.