பெண் குழந்தைகள், பெண்கள் கலந்து கொண்ட கொப்பி கொட்டல் திருவிழா


பெண் குழந்தைகள், பெண்கள் கலந்து கொண்ட கொப்பி கொட்டல் திருவிழா
x

செரியலூர் கிராமத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற கொப்பி கொட்டல் திருவிழா நடந்தது.

புதுக்கோட்டை

பெண் குழந்தைகளின் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே செரியலூர் கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைகள் பருவமெய்துவதற்கு முன்பு இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். பிறந்த சிறு பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் தாய் அல்லது சகோதரிகள் கலந்து கொள்கிறார்கள். திருவிழாவில் பங்கேற்கும், குழந்தைகள், பெண்கள் திருவிழா முடியும் வரை விரதம் இருந்து கலந்து கொள்ளும் இந்த விழாவை கொப்பிக் கொட்டல் திருவிழா என்று கூறுகின்றனர்.

விரதம்

ஒவ்வொரு ஆண்டும் தை 2-ம் நாள் செரியலூர் கிராமத்தில் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலையில் வெற்று பொங்கல் வைத்தனர். பின்னர் 3 படையல் வைத்து ஒரு படையலை விரதம் இருப்பவர்கள் சாப்பிடவும், மற்ற இரு படையல்களை ஒரு ஓலை கூடையில் இரு பெரிய சாணப் பிள்ளையார்களுடன் 92 சிறு சாணப் பிள்ளையார் செய்து அதில் கூழைப் பூ, ஆவாரம் பூ, அருகம்புல், வேப்பிலை, கரும்பு, வெல்லம் ஆகியவற்றை வைத்து கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தடியில் கிராமத்தின் அனைவரும் ஒன்று கூடி பெண்கள், பெண் குழந்தைகள் கும்மியடித்து வழிபாடு செய்து அணிவகுத்து தீர்த்தான் ஊரணி வரை கொண்டு சென்றனர்.

அங்கு கூடையில் உள்ள பொங்கல், வெல்லம், கரும்பு ஆகியவற்றை தனியாக எடுத்துக் கொண்டு மற்ற பொருட்களை குழியில் புதைத்துவிட்டு ஒரு சிறு பிள்ளையாரை அருகில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் காட்டில் வைத்து வழிபட்டு சென்றனர்.

கிராம மக்களின் நம்பிக்கை

இந்த திருவிழாவை கொப்பித் திருவிழா என்று இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். நேற்று நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமான பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் திருவிழாவை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி பெண்கள் மற்றும் கிராம மக்கள் கூறுகையில், காத்தான் - தீர்த்தான் என இரு சகோதரர்கள் முந்தைய காலத்தில் வாழ்ந்துள்ளனர். அதில் காத்தான் மகள் கொப்பியம்மாள் சிறு குழந்தையாக இருக்கும் போது தனது பெரியப்பா தீர்த்தான் வீட்டுக்கு காட்டுப் பகுதியில் சென்று காணாமல் போய்விட்டார். பல நாட்களுக்கு பிறகு ஊரின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தின் மேல் இருந்து அம்மை நோய் தாக்கி இறந்து கீழே விழுந்ததை பார்த்து கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

அதன் பிறகு கொடிய அம்மை நோய் வந்து யாரும் இறக்க கூடாது என்பதற்காக அம்மைக்கு பலியான கொப்பியம்மாளை நினைத்து சிறு பெண் குழந்தைகள் அம்மைக்கு எதிரான நோய் தடுப்பு மூலிகைகளுடன் ஊர்வலமாக சென்று தீர்த்தான் ஊரணியில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. இந்த பழக்கம் பன்நெடுங்காலமாக உள்ளது. அதனால் காலங்கள் மாறினாலும் கலாசாரத்தை மாற்ற விரும்பாமல் கிராமத்தினர் இந்த வழிபாட்டை செய்து வருகிறோம். வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றனர்.


கொப்பிக் கொட்டல்

கொப்பி கொட்டல் என்பது கும்மியடித்தல் என்று பொருள். அதனால் இந்த திருவிழாவை கொப்பிக் கொட்டல் திருவிழா என்று கூறப்படுகிறது. மேலும் சுமார் பலநூறு ஆண்டுகள் பழமையான பாலை மரத்தடியில் பெண்களும், பெண் குழந்தைகளும் கூடி கும்மிடியப்பதுடன் பாலை மரத்தை தெய்வமாக வணங்கிய பிறகே ஊர்வலமாக சென்று தீர்த்தான் ஊரணி கரையில் படையலிட்டு வழிபட்ட பிறகு வீட்டிற்குச் சென்று விரதம் முடிக்கின்றனர்.


Next Story